மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தற்காலிக நிதித் தேவைகளை சமாளிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் Ways and Means Advances (WMA) வரம்பை ரூ.67,839 கோடியாக உயர்த்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது ரூ.61,008 கோடியாக உள்ள ஒட்டுமொத்த வரம்பை 11.2 சதவீதம் உயர்த்த இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
WMA என்றால் என்ன?
மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும் காலத்துக்கும் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய காலத்துக்கும் இடையே தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம். அத்தகைய சூழலில் குறுகிய கால நிதி உதவியாக RBI வழங்குவதுதான் WMA.
கர்நாடக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஐ.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழு, மாநிலங்களின் பட்ஜெட் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் RBI-யிடமிருந்து தேவைப்படும் பணப்புழக்க ஆதரவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும் வரம்பை மாற்றலாம்
WMA ஒட்டுமொத்த வரம்பை ஆண்டுதோறும் ஆய்வு செய்யவும் குழு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், ஓராண்டில் அதிகபட்சமாக 4 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உயர்வு முடிவு செய்யப்படலாம்.
அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள வரம்பை குறைக்க வேண்டாம் என்பதும் குழுவின் பரிந்துரையாக உள்ளது.
மாநிலங்களுக்கு தனித்தனி கணக்கு
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையைப் பின்பற்றாமல், அவற்றின் வருவாய் வரவுகளை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாக WMA வரம்பை நிர்ணயிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்கள் பணப்புழக்க தேவைக்காக RBI-யை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், வேறு சில மாநிலங்கள் அவசரக் கடன் வாங்குவதைத் தவிர்க்க அதிகளவு ரொக்க இருப்பை வைத்திருப்பதாக குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஓவர் டிராஃப்ட்டுக்கும் கட்டுப்பாடு
தொடர்ச்சியாக ஓவர் டிராஃப்ட் பயன்படுத்த அனுமதிக்கப்படும் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகவும், ஒரு காலாண்டில் அனுமதிக்கப்படும் மொத்த நாட்களை 36-ல் இருந்து 30 ஆகவும் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்கள் தொடர்ந்து ஓவர் டிராஃப்டை சார்ந்திருப்பதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
