ஆபாசம் நிறைந்த ‘ராணா நாயுடு’: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்!

Published On:

| By Jegadeesh

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் ராண ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஓ.டி.டி. தளத்தில் மார்ச் 10 ஆம் தேதி வெளியான ‘ராணா நாயுடு’ தொடர் ஆபாசமாக இருப்பதாக குற்றம்சாட்டும் ரசிகர்கள், அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், ராணா டகுபதி ஆகியோரை ‘புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் இப்படி மோசமான தொடரில் நடிக்கலாமா’ என்று விமர்சித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

’ரே டோனவேன்’ என்கிற அமெரிக்க வெப் சீரிஸை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்திய வெப்சீரிஸான ‘ராணா நாயுடு‘.

ADVERTISEMENT

ஃபிக்ஸராக பணியாற்றும் ராணா, பிரபலங்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் பணியை மேற்கொள்கிறார். மனைவி, இரு குழந்தைகள், இரு சகோதரர்கள் என ராணாவின் குடும்பமும், அவரது தொழிலும் வழக்கமாக சென்று கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், சிறையில் இருக்கும் அவரது தந்தை நாகா நாயுடு மீது, கடும் கோபத்தில் இருக்கிறார் ராணா. 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நாகா நாயுடு, நல்ல எண்ண அடிப்படையில் 15 ஆண்டுகளில் விடுதலை ஆகிறார்.

ADVERTISEMENT

இதை அவரது மகன்களே எதிர்பார்க்கவில்லை. விடுதலையாகி வரும் நாகா, தன் மகன்களுடன் சேர முயற்சிக்கிறார். அதனால் நிறைய பிரச்னைகள் வருகிறது.

ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மகன் ராணா, அப்பா நாகாவை தீர்த்து கட்ட முயற்சிகளை எடுக்கிறார். அதில் அவர் கொல்லப்பட்டாரா? ஏன் இவர்களுக்குள் இத்தனை வன்மம்? நாகா நாயுடு சிறை சென்றது ஏன்? மகன்களின் கோபத்தின் பின்னணி என்ன? என்பது தான் சீரிஸின் முழு கதை.

பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான ராணா டகுபதி ராணா நாயுடுவாகவும் அவரது தந்தை நாகா நாயுடாக வெங்கடேஷூம் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தொடர் மீது எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கும் பலரும், அதில் நிறைந்துள்ள ஆபாசக் காட்சிகளையும், பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, தாங்கள் பெரிதாக மதிக்கும் நடிகர்களான வெங்கடேஷூம், ராணா டகுபதியும் இதுபோன்ற வெப் தொடரில் நடித்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது ரசிகர்கள் பலரின் ஆதங்கம்.

வெங்கடேஷ் நடித்திருக்கிறார் என்பதாலேயே குடும்பத்துடன் தொடரை பார்க்க அமர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

ராணா நாயுடு தொடரின் தமிழ்ப் பதிப்பு இன்னும் மோசமாக இருப்பதாகவும், சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டு ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து, ‘ராணா நாயுடு’ தொடர் பிடிக்கவில்லை என்று விமர்சிப்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நடிகர் ராணா டகுபதி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் மீம்சை பகிர்ந்து, “இது ஏ சான்றிதழ் பெற்ற 18 பிளஸ் தொடர். கண்டிப்பாக தனியாக பாருங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், ‘ராணா நாயுடு’ தொடரை ஆதரிக்கும் பதிவுகளையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘எல்லா தொடரையும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு தொடரை மதிப்பிடுவதற்கான மோசமான அளவுகோல் இது.’ என்ற ரசிகர் ஒருவரின் பதிவை ரீட்வீட் செய்து அதுவும் சரிதான் என்று ராணா டகுபதி தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

அண்ணாமலை மீது விமர்சனம்: கடம்பூர் ராஜூவை விளாசிய நாராயணன் திருப்பதி

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share