பெண்கள் பாதுகாப்பைப் பேசும் படம்!
ஏதேனும் ஒரு துறையில் புகழ் பெற்றவர்கள் சினிமாவில் நுழையும்போது எதிர்பார்ப்பும் அலட்சியமும் ஒருசேரப் பரவும். சம்பந்தப்பட்டவர்கள் திரையில் எத்தகைய திறமையை வெளிப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து, ஏதேனும் ஒன்று உயரம் பெறும். அதற்கேற்ற தாக்கம் ரசிகர்களிடம் நிறையும். ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி செந்தில், தற்போது ‘லைசென்ஸ்’ படம் வாயிலாக அத்தகையதொரு அனுபவத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
அந்த படத்தில் அவரது நடிப்பு எப்படி அமைந்துள்ளது? ஒரு திரைப்படமாக, அது நம்மில் உருவாக்கும் தாக்கம் எப்படிப்பட்டது?
பெயர்க் காரணம்!
ஒரு பெண் தனக்கு துப்பாக்கி உரிமம் வேண்டுமென்று அரசிடம் கேட்பதுதான் ‘லைசென்ஸ்’ படத்தின் முதல் பாதிக் கதை. அது அவருக்குக் கிடைத்ததா இல்லையா என்பதைச் சொல்கிறது இதன் இரண்டாம் பாதி.
துப்பாக்கி உரிமம் கேட்கும் பெண் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஒரு சாதாரண பெண் அப்படியொரு முடிவுக்கு ஏன் செல்ல வேண்டும்? அதற்குப் பதிலளிக்கும் வகையில், பெண்களுக்கான பிரச்சனைகளில் தானாக வந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு சமூக ஆர்வலராக அவரைக் காட்டுகிறது இப்படம்.

ஒரு பெண் குழந்தை பாலியல் அத்துமீறலுக்கு ஆளான வழக்கில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு உதவும் பாரதியையும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மிரட்டுகிறார். அதன்பின்னரே, மேற்சொன்ன முடிவுக்கு பாரதி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
துப்பாக்கி உரிமம் கேட்டால், அரசிடம் இருந்து அது உடனே கிடைத்துவிடுமா? பிரபலங்களாக அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அதனைத் தர முடியும் என்று பாரதிக்குப் பதிலளிக்கப்படுகிறது. அரசின் முடிவை ஏற்காமல், அவர் நீதிமன்றத்தை நாடுகிறார்.
காவல் நிலையம், நீதிமன்றம் என்றிருக்கும் ஒரு சாதாரணப் பெண்மணியை, அவர் சார்ந்த குடும்பம் எப்படி நோக்குகிறது? அதற்கு, அவரது கணவர், மகள், மாமியார் மற்றும் தந்தை ஆகிய பாத்திரங்கள் வழியே பதிலளிக்கிறார் இயக்குனர். தந்தை உடன் பதினாறு ஆண்டுகளாகப் பேசாமல் இருக்கிறார் என்று கிளைக்கதை என்று தனியாகப் பிரிந்து, இறுதியில் அது மையக்கதையோடு இணைகிறது.
ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்றாலும், தான் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதில் பாரதி கவனமாக இருக்கிறார். நீதிமன்ற விசாரணையின்போது, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட வேண்டும் என்பதில் அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதியாக இருக்கிறார். தலைமைச்செயலகம் வரை விஷயம் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
அவர் ஏன் அவ்வாறு நினைக்கிறார்? பெண்கள் அனைவரும் துப்பாக்கியைக் கையிலேந்தினால் இந்தச் சமூகத்தில் என்ன நிகழும்? அந்தக் கேள்விகளுக்கும் மிகத்தெளிவான பதில்களைத் தருகிறது கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த ‘லைசென்ஸ்’.
குறைகள் உண்டு!
திரையில் முதன்முறையாக நாயகி அவதாரம் எடுத்திருக்கும் ராஜலட்சுமி, இதற்கு முன்பாகத் தனது கணவர் செந்தில் உடன் இணைந்து ’ரங்கா’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அந்த படமும் சரி, அவர்கள் இருவரது பெர்பார்மன்ஸும் சரி, நம் நினைவில் பதியவில்லை.
‘லைசென்ஸ்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளில், வெகு இயல்பான ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியாக நடித்து நம் கவனம் கவர்கிறார் ராஜலட்சுமி. ஒரு சில காட்சிகளில் கைகளை எவ்வாறு அசைப்பது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார். அவரது கணவராக, மகளாக, மாமியாராக நடித்தவர்கள் புதுமுகங்கள் என்பது உடனடியாகத் தெரிந்துவிடுகிறது.

ராஜலட்சுமியின் தந்தையாக நடித்துள்ள ராதாரவி, ரொம்பச் சுலபமாகத் தன் வேலையை நிறைவு செய்திருக்கிறார். அவரது அனுபவம் மட்டுமல்லாமல், ராதாரவி நடித்த பல படங்களின் சாயல் அப்பாத்திரத்தில் தெரிவதும் அதற்கான காரணம்.
என்.ஜீவானந்தம், நமோ நாராயண, கீதா கைலாசம், தீபா சங்கர், ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பழ.கருப்பையா, வையாபுரி வரும் காட்சிகள் லேசாகச் சிரிக்க வைக்கின்றன. இயக்குனர் குழுவில் இடம்பெற்ற விஜய் பாரத், திரையில் வழக்கறிஞராகத் தோன்றியிருக்கிறார்; அவர் முகத்தில் தென்படும் தயக்கம் மிகப்பெரிய மைனஸ். குழந்தை நட்சத்திரங்கள் பிரசிதா, ஸ்ரீமதி, அதிதி பாலமுருகன் ஆங்காங்கே வந்து நம்மைக் கவர்கின்றனர்.
’அயலி’ வெப்சீரிஸில் கலக்கிய அபி நட்சத்திராவும், அவரது தோழியாக வரும் தன்யா அனன்யாவும் நம்மை ஈர்க்கின்றனர். ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் செயற்கைப்பூச்சு அதிகமிருப்பதைச் சரி செய்திருக்கலாம்.
கதாபாத்திரங்களின் முகங்களையும் உணர்வுகளையும் தெளிவாகக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.காசி விஸ்வநாதன். ஆனால், கதையையும் களத்தையும் யதார்த்தமாகக் காட்ட, அவரது பணி கொஞ்சம் கூட உதவவில்லை.
படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத், கலை இயக்குனர் சிவ யோகா, என்று தொழில்நுட்பப் பணிகளைக் கையாண்ட கலைஞர்களின் உழைப்பு, இயக்குனரின் எண்ணங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவே கருத வேண்டியிருக்கிறது. இசையமைப்பாளர் பைஜு ஜேக்கப் தந்த பாடல்களும் பின்னணி இசையும் பெரிய அளவில் நம்மை ஈர்க்கவில்லை.
இயக்குனர் கணபதி பாலமுருகன் எழுத்தாக்கத்திற்கு வாசகர் காளியப்பன், முரளிராஜன், ஏ.விஜயகுமார் உதவியிருக்கின்றனர். சில இடங்களில் வசனங்கள் ‘பஞ்ச்’களாக வெளிப்பட்டு நம் மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அதேநேரத்தில், திரைக்கதையில் தென்படும் நாடகத்தனம் ரொம்பவே அயர்ச்சியைத் தருகிறது.
பிளாஷ்பேக் காட்சிகளில் அபி நட்சத்திராவும் தன்யா அனன்யாவும் ஒரே அறையில் இருக்கின்றனர். அடுத்த நொடியே ஒரு அசம்பாவிதம் நிகழ்வதாகக் காட்டியிருப்பது ‘இதுல லாஜிக்கே இல்லையே’ என்று யோசிக்கச் செய்கிறது. பாலியல் வழக்கு குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை என்று கேட்டு நாயகி காவல்நிலையத்துக்குச் செல்வது உட்படச் சில காட்சிகளில் அது போன்ற குறைகள் தென்படுகின்றன. சமூக யதார்த்தம் என்பதைத் தாண்டி காட்சியாக்கம் சார்ந்தும் அவை இருப்பது இன்னும் படத்தைப் பலவீனப்படுத்துகிறது.
துப்பாக்கி ஏன் தேவை?
ஒரு சாதாரண பெண் துப்பாக்கி வேண்டும் என்று கேட்பதன் பின்னணியில், சுயபாதுகாப்பை உறுதி செய்யும் கொள்ளும் எண்ணம் உள்ளதாகச் சொல்கிறது ’லைசென்ஸ்’. கிளைமேக்ஸில் அது மிகத்தெளிவாக வெளிப்படுட்டாலும், இடைப்பட்ட காட்சிகள் ‘ட்ராமா’ பார்த்த அனுபவத்தையே தருகின்றன.

நாயகி சம்பந்தப்பட்ட இரு வேறு பிளாஷ்பேக் காட்சிகளும், மக்கள் கருத்து பாணியில் இடம்பெறும் காணொளிகளும் ஒருகட்டத்தில் சலிப்பை ஊட்டுகின்றன. அவற்றை இன்னும்கூடச் செறிவாகக் காட்டியிருக்கலாம்.
மிக முக்கியமாக, இது போன்ற கதைகளுக்கான பாத்திர வார்ப்பில் நுணுக்கமாகச் சில அம்சங்களைப் புகுத்தியிருக்க வேண்டும். இயக்குனர் கணபதி பாலமுருகன் அதனைச் செய்யாமல் விட்டிருக்கிறார்; கதையின் கனமே ரசிகர்களை ஈர்க்கும் என்று நம்பியிருக்கிறார்.
இதுநாள் வரை திரையில் பார்த்த சில ‘க்ளிஷே’க்களை தவிர்த்து, யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியமைப்போடு ஆக்கியிருந்தால், இந்த ‘லைசென்ஸ்’ பெண்கள் நலவாழ்வு குறித்துப் பேசும் முக்கியமான படங்களில் ஒன்றாக மாறியிருக்கும்.
தற்போது, அந்த வரிசையில் மேலும் ஒன்றாக இணைந்துள்ளது. அவ்வளவுதான்!
உதய் பாடகலிங்கம்
நாங்க தோக்கணும்னு வேண்டிக்கங்க… இல்லேன்னா மொத்தமா வெளில அனுப்பிருவோம்!
பேய் கனவில் சிக்கும் குடும்பம்: ’கான்ஜூரிங் கண்ணப்பன்’ ட்ரெய்லர் எப்படி?
