நாங்க தோக்கணும்னு வேண்டிக்கங்க… இல்லேன்னா மொத்தமா வெளில அனுப்பிருவோம்!

விளையாட்டு

ICC world cup 2023: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமிருக்கும் எந்த அணிகளும் இன்னும் தகுதி பெறவில்லை.

அதே நேரத்தில் தொடரில் மோசமாக விளையாடி வரும் வங்கதேச அணி தொடரில் இருந்து முதல் ஆளாக வெளியேறியுள்ளது.

இதனால் ரொம்ப திகிலா இருக்கேப்பா என ரசிகர்கள் நகம் கடித்து காத்து கொண்டிருக்கும் நிலை தற்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் தற்போது ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

அதன்படி இன்று (நவம்பர் 4) காலை தொடங்கி நடைபெற்று வரும் பாகிஸ்தான்-நியூசிலாந்து லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளுக்கும்  அரையிறுதி வாய்ப்பு கடினமாகிவிடும்.

இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி பெற வேண்டும் என சக அணிகள் நகம் கடித்து காத்திருக்கின்றனர். குறிப்பாக இன்று  எதிர் அணியாக களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இதே நியூசிலாந்து அணி தான், இந்திய அணியை வெளியேற்றி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் தீயை அள்ளி கொட்டியது. ஆனால் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் கோப்பையை பரிதாபமாக இழந்தது.

அதேபோல இந்த தொடரிலும் உலகக்கோப்பை தொடர் அடுத்த கட்டத்தை எட்ட நியூசிலாந்து அணி தான் துருப்பு சீட்டாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்து அணி 30 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 211 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா 88 ரன்களுடனும், கேப்டன் கனே வில்லியம்சன் 73 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி இதே வேகத்தில் விளையாடினால் கண்டிப்பாக 350 ரன்களை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்துமா என்று அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து அணிகளின் ரசிகர்களும் இந்த ஆட்டத்தை பதற்றத்தோடு பார்த்து வருகின்றனர்.

– மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

‘ஹெல்த் வாக்’ திட்டம்: கொட்டும் மழையில் தொடங்கி வைத்த உதயநிதி

மழை… எவ்வளவு அடித்தாலும் சென்னை தாங்கும்: அமைச்சர் நேரு

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *