‘கிளாசிக்’ திரைப்படம் பார்த்த உணர்வெழுகிறதா?
ஏற்கனவே வெற்றி பெற்ற, கிளாசிக் ஆகக் கருதப்படுகிற ஒரு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குகிறபோது, அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பெருகி நிற்கும். அதேநேரத்தில், அந்த படைப்பை அதற்கேற்றவாறு தருவது சம்பந்தப்பட்ட படக்குழுவுக்குச் சவாலானதாக மாறும். அந்த வகையில், 2018இல் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரெய்டு’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் மலையென உயர்ந்து நின்றது. ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், வாணி கபூர், ரித்தேஷ் தேஷ்முக், சுப்ரியா பதக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அந்த எதிர்பார்ப்பினை ஈடு செய்ததா, கடந்து நின்றதா அல்லது தேங்கிச் சுருண்டதா? raid 2 movie review may 2025

வெளிக்கொணரப்படும் ஊழல்!
வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாகப் பெயரெடுத்தவர் அமய் பட்னாயக் (அஜய் தேவ்கன்). இதுவரை 74 இடங்களில் அவரது தலைமையிலான குழு சோதனை நடத்தியிருக்கிறது. ஆனால், கடைசி முறை மட்டும் அவர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த பெயரோடு, அவர் ராஜஸ்தானிலுள்ள ‘போஜ்’ எனுமிடத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார்.
போஜ் நகரம் முழுவதுமே மனோகர் தங்கர் எனும் தாதா பாயின் (ரித்தேஷ் தேஷ்முக்) கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஊரார் அனைவரும் அவரைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இப்போது அரசைத் தாங்குகிறவராக மாறியிருக்கிறார். உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவரது அரசியல் பிம்பம் மீது சிறு கறை கூட இல்லை.
அந்த ஒரு விஷயம் தான், அமய் பட்னாயக் கண்களுக்குப் பூதாகரமாகத் தெரிகிறது. மெல்ல தாதா பாய் குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். மேலோட்டமாகக் கணக்கு வழக்குகள் எல்லாம் ‘க்ளீன்’ ஆக தோற்றம் தந்தாலும் அவற்றின் உள்ளே நிறைய எரிமலைகள் குமுறிக் கொண்டிருப்பதை உணர்கிறார்.
தனக்குக் கிடைத்த ஆதாரங்கள் சரி என்று தெரிய வந்ததும் சோதனையில் ஈடுபடுகிறார். அந்த காலைப்பொழுது வருமான வரித்துறை அலுவலகத்தில் அவருடன் பணியாற்றுபவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆனால், அந்த சோதனைக்கு முன்னே பல மாத காலம் அமய் உழைத்திருப்பதும் அப்போது அவர்களுக்குத் தெரிய வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக, தாதா பாய் வீடு, கட்சி அலுவலகம், அறக்கட்டளை அலுவலகம், அவரது பினாமிகளின் பெயரில் உள்ள வயல்வெளிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சோதனை நடக்குமிடங்களில் இருந்து வெளியேறுமாறு வருமான வரித்துறை ஊழியர்களை அச்சுறுத்துகின்றனர் தாதா பாயின் தொண்டர்கள்.
அந்தச் சூழலில், ‘முடிஞ்சா என்னைப் புடி’ என்று அமய்யிடம் சவால் விடுகிறார் தாதா பாய்.
அப்போதுதான், தாதா பாயை நெருங்கத் தான் ‘ஸ்கெட்ச்’ போடுவதற்கு முன்னதாகவே, தனக்கு அவர் வலை விரித்திருப்பதை அறிகிறார் அமய்.
அதனைத் தொடர்ந்து, பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் அமய். அந்த தடையை மீறி, தாதா பாய் செய்திருக்கும் வரி ஏய்ப்பு பற்றி அறிய முற்படுகிறார்.
அந்தச் சூழலில், ரயில்வே வேலை வாங்கித் தந்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நிலங்களை பினாமி பெயரில் தாதா பாய் அமுக்கிய விவரங்கள் அவருக்குத் தெரிய வருகிறது. அவற்றைச் சாட்சியங்களுடன் நிரூபிப்பது கடினம் என்பதே உண்மையான நிலை.
அதனை எதிர்கொண்டு அமய் சாதித்தாரா? தாதா பாயின் நேர்மையாளர் முகமூடியைக் கிழித்தாரா என்பதே ‘ரெய்டு 2’வின் மீதி.
ஒரு ஊழல் குற்றம் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படுவதை ‘கமர்ஷியல் சினிமா’வுக்கே உரிய பரபரப்போடு காட்டுகிறது இப்படம். முதல் பாகத்தில் இருந்த யதார்த்தமான திரைக்கதை ட்ரீட்மெண்டை மீறி, இதில் ‘கமர்ஷியல் டச்’ அதிகம். அது சிலருக்குக் குறையாகத் தெரியலாம். சிலருக்கு நிறையாகப் படலாம்.

அசத்தும் ஒருங்கிணைப்பு!
1989இல் கதை நிகழ்வதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் குப்தா. அதற்கேற்ற பின்னணியை தயாரிப்பு வடிவமைப்பாளர் ரீத்தா கொஷ், ஒளிப்பதிவாளர் சுதீர் குமார் சௌத்ரி, படத்தொகுப்பாளர் சந்தீப் பிரான்சிஸ் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் துணையோடு அமைத்திருக்கிறார்.
அதுவே ஒரு ‘கிளாசிக்’ திரைப்படம் பார்க்கிற உணர்வைத் தருகிறது. அது போதாதென்று தனது பின்னணி இசையால் ஒவ்வொரு காட்சியையும் அதற்குரிய தன்மையை உயர்த்திக் காட்டுகிற வேலையைச் செய்திருக்கிறார் அமித் திரிவேதி.
அமித் திரிவேதி, யோ யோ ஹனிசிங், ரோசக் கோஹ்லி, சச்செத் – பரம்பரா, வொயிட் நாய்ஸ் கலெக்டிவ்ஸ், நுஸ்ரத் பதே அலிகான் ஆகியோர் இதில் பாடல்களைத் தந்திருக்கின்றனர்.
நடிப்பைப் பொறுத்தவரை ‘ரெய்டு’ படத்தின் தொடர்ச்சி இது என்று உணர வைத்திருக்கிறார் அஜய் தேவ்கன். இதில் அவரது மனைவியாக ‘இலியானா’வுக்குப் பதிலாக நடித்திருக்கிறார் வாணி கபூர்.
ரித்தேஷ் தேஷ்முக் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது வில்லத்தனம் பின்பாதியை சுவாரஸ்யமானதாக ஆக்கியிருக்கிறது.
இது போக ரஜத் கபூர், சுப்ரியா பதக், பிரிஜேந்திரா கலா, யஷ்பால் சர்மா, கோவிந்த் நாம்தேவ், பிரிதிஷா ஸ்ரீவஸ்தவா, முதல் பாகத்தில் வந்த சௌரஃப் சுக்லா, அமித் சியால் என்று பெரும் பட்டாளமே இதிலுண்டு.
முதல் பாகத்தில் திரைக்கதையாக்கத்தில் ஒரு ‘கிளாசிக் அப்ரோச்’ இருந்தது. இதில் அது தேவையில்லை என்று முடிவு செய்து இறங்கியடித்திருக்கிறது ரிதேஷ் ஷா, ராஜ்குமார் குப்தா, ஜெய்தீப் யாதவ், கரண் வியாஸ் குழு.
இன்னும் சில நாட்களில் ஓடிடியில் வெளியாகும்போது இப்படம் நிறையவே கொண்டாடப்படலாம். ரயில்வே வேலைக்காக நில மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிற குற்றச்சாட்டு அதற்கான காரணம்.
மத்தியில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது இப்படியொரு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. அதனை நிழலாகக் காட்டுகிறது ‘ரெய்டு 2’.
இந்த ஒரு விஷயமே, இப்படத்தின் மீதான கவனத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். அவ்வாறு காண்பவர்கள் ரசிக்கிற வகையில் இப்படம் இருக்கிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம். மற்றபடி, கமர்ஷியல் சினிமா என்ற வகையில் இதிலிருக்கிற லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளிவிடலாம்..!
