நீங்கள் சொன்னால்தான்.. அரசியலுக்குள் நுழையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Raghava Lawrence

அரசியலுக்குள் நுழைவேன் என்று தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும், தற்போதைய சூழ்நிலைகளே தன்னை இந்த முடிவை நோக்கி நகர்த்தியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதையும் எதிர்பார்க்காமல், உங்களது கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். எனக்கு தற்பொழுது உங்களது ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவையாக உள்ளது. நான் அரசியலுக்குள் நுழைவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ அல்லது அரசியல் பதவிகளைப் பெற வேண்டும் என்றோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை.

ADVERTISEMENT

நான் நம்பக்கூடிய, எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்குத் துணையாக நின்று, ஒரு தனிமனிதனாக நான் செய்து வரும் சமூக சேவையை விட இன்னும் பெரிய அளவில் சமுதாயத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே எண்ணமாக இருந்தது . ஆனால், இன்றைய சூழ்நிலைகள் நான் அரசியலில் நுழைய வேண்டிய ஒரு கட்டத்திற்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.

இன்று காலை நான் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியல் பற்றிய எனது புரிதல், அது எப்படி என் வாழ்க்கைக்குள் வந்தது, அரசியல் குறித்து எனது தாயாரின் பார்வை மற்றும் எனது இந்தப் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான, சுவாரசியமான சம்பவங்கள் குறித்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எனது மனதின் ஆழத்திலிருந்து பேசியுள்ளேன்.

ADVERTISEMENT

இந்த வீடியோவை பொதுமக்கள் மற்றும் எனது ஆதரவாளர்கள் இறுதிவரை பார்த்துவிட்டு, உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன் நான் எடுக்கும் இந்த முக்கியமான முடிவிற்கு, உங்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் எனக்குப் பெரிதும் உதவிகரமாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share