தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 30) தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு “தேமுதிக லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் எந்தெந்தக் கட்சிகள் கையூட்டு பெற்றன என்ற பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் தேமுதிக வின் பெயர் இருக்கிறதா எனப் பாருங்கள். நாங்கள் சொந்த உழைப்பில் கட்சியை வளர்த்து வருகிறோம்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் கூட்டணி அறிவிப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்த கேள்விக்கு, “காலதாமதம் என்ற கருத்து பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குத்தான். எங்களுக்கு இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதா? வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி கொடுக்கப்பட்டுவிட்டதா? இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டதா? இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். இவை எல்லாம் மார்ச் மாதம்தான் தொடங்க உள்ளன. அதனால் பிப்ரவரி மாதம் ஒரு முழு மாதமே உள்ளது.
எங்கள் கட்சிக்கு எப்போது முடிவெடுக்க வேண்டும், யாருடன் கூட்டணி வைக்க வேண்டும், எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் உரிய நேரத்தில் அதை செய்வோம். 2011 வரை தனித்துப் போட்டியிட்ட கட்சி எங்களுடையது. எங்கள் மாவட்டச் செயலாளர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் கௌரவத்திற்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்போம். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.
