குரல் பரிசோதனை, ஆண்மை பரிசோதனை… சீமான் கழுத்தைச் சுற்றும் பாம்பாக பாலியல் வழக்கு!

Published On:

| By vanangamudi

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது, நடிகை விஜயலட்சுமி விவகாரம்.

2010-இல் சீமான் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு முழுமையான சினிமாக்காரராக இருந்தார். அப்போது சீமானுடன் நடிகை விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்கிய பிறகு 2011-ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விஜயலட்சுமி ஒரு புகார் அளித்தார். Vijayalakshmi sexual assault case

சீமான் மீது புகார்!

அந்த புகாரில், “நடிகரும் இயக்குனருமான சீமானுடன் நான் திரைத்துறையை சேர்ந்த நடிகை என்ற வகையில் அவருடன் நெருங்கிப் பழகினேன். ஆனால், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார். நான் அவரால் ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  குறிப்பிட்டிருந்தார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் சீமான். அதன் பின் வந்த அதிமுகவின் ஜெயலலிதா ஆட்சி, அதற்குப் பிறகு 2017 இல் வந்த எடப்பாடி ஆட்சி ஆகியவற்றில் சீமானின் புகார் மீது பெரிய அளவு நடவடிக்கை இல்லை. அதனால் அந்த புகாரை சில மாதங்களிலேயே வாபஸ் வாங்குவதாக போலீஸ் நிலையத்துக்கே சென்று எழுதிக்கொடுத்தார்  நடிகை விஜயலட்சுமி.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தபின் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் தேதி விஜயலட்சுமி சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  நானும் சீமானும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், இது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னார். என்னை சென்னையில் இருக்க வேண்டாம் என்றும் சொன்னார்.  கணவன் மனைவியாகவே நாங்கள் வாழ்ந்தோம். அவரால் நான் ஏழு முறை கர்ப்பமானேன். ஆனால் எனக்குத் தெரியாமலேயே கருச்சிதைவு  மாத்திரை மூலமாக ஏழு முறையும் கருவைக் கலைக்க வைத்தார்.

புகாரை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி

தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே சீமான், செல்வம் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகாரில் கூறினார்.  தனது புகாரோடு  அவரும் சீமானும் இணைந்திருக்கும் சில வீடியோக்களையும் ஆதாரங்களாகக் கொடுத்தார் விஜயலட்சுமி.

இந்த புகார் தொடர்பாக  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி 164 வாக்குமூலம் அளித்தார். திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜரான நடிகை விஜயலட்சுமி, இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சீமான் உடன் திருமணம் நடந்ததற்கான புகைப்படம், ஹோட்டல்களில் தங்கிய வீடியோ, வங்கி பணவர்த்தனை விவரம் ஆகியவற்றை போலீசிடம் கொடுத்திருப்பதாக கூறியிருந்தார் விஜயலட்சுமி.

இந்த பிரச்சினையில் வளரசவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.  2023 ஆகஸ்டு 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்ற சம்மனுக்கு, சீமான் ஆஜர் ஆகவில்லை. அவரது வழக்கறிஞர்கள்தான் ஆஜராகினர். அடுத்து இரண்டாவது முறையாக சீமானுக்கு சம்மன் அனுப்பினர் போலீஸார். இதற்கிடையே விஜயலட்சுமி கமிஷனர் ஆபீசில் கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றார்.  ‘என்னால் சீமானுடன் போராட முடியவில்லை. இனி சென்னை பக்கம் வர மாட்டேன்’ என்று கண்ணீருடன் புகாரை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி. Vijayalakshmi sexual assault case

காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

இந்த நிலையில்தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தனது மனைவியான வழக்கறிஞர் கயல்விழியுடன் ஆகஸ்டு 18 ஆம் தேதி  விசாரணைக்கு ஆஜரானார் சீமான். ஒரு மணி நேரம் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

 “நடிகை விஜயலட்சுமி ஏற்கெனவே கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே என் மீது கொடுத்த புகாரைத் திரும்ப பெற்றிருந்தார். மீண்டும் தற்போது திரும்ப பெற்றுள்ளார்.

2011-இல் திமுக – காங்கிரஸ் தூண்டுதலின் பேரில்தான் இந்த வழக்கு என் மேல் தொடுக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து, உண்மைத் தன்மை இல்லை என்றவுடன் தூக்கி எறிந்துவிட்டார். அதன்பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் விஜயலட்சுமி நிறைய புகார் கொடுத்தார். ஆனால், அதை எடுக்கவில்லை.

என் மீது 128 வழக்குகள் உள்ளன. இவை மக்களுக்கான போராட்டங்களால் என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள். அவற்றை இவர்களால் நடத்த முடியவில்லை. ஆனால், இந்த வழக்கை எடுத்து என்னை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த விசாரணையில், விஜயலட்சுமி எனக்கு பணம் கொடுத்தாரா என்று கேட்டனர்.  60 லட்சம் ரூபாய், 30 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொடுத்தாரா  என்று கேட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கவில்லை என்று பதிலளித்தேன்.

இந்த பெண்களால் 13 ஆண்டுகள் நான் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறேன். இது ஆண் வன்கொடுமை’ என்று கூறினார் சீமான்.

அப்போதே சீமான், “நான் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு செல்வேன்.  விஜயலட்சுமி  கூறிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வந்து சொல்ல வேண்டும்.  ஏழுமுறை, எட்டுமுறை கருக்கலைப்பு செய்ததாக கூறுவதெல்லாம் என்ன நகைச்சுவை?” என்று அவர் கூறினார்.

சீமானுக்கு எதிராக திரும்பிய வழக்கு!

இதற்குப் பிறகுதான் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் சீமான்.

’நான் திமுக அரசை எதிர்த்து பேசி வருவதால் 2011-இல் கொடுக்கப்பட்டு 2012-இல் வாபஸ் பெறப்பட்ட புகாரை 12 வருடங்களுக்குப் பிறகு எனக்கு எதிராக அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடுத்த வழக்கே இன்று அவருக்கு எதிராக வந்து நிற்கிறது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில், “விஜயலட்சுமி மனமுவந்து புகாரை வாபஸ் வாங்கவில்லை. அதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது’ என்று வாதிட்டனர்.  

சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டார். ஆனால், பிப்ரவரி 19 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், “விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரிக்க வேண்டும்.

மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் என்பது தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர்.

சீமான் வற்புறுத்தியதால் தான் ஆறு முறை கருக்கலைப்பு செய்தேன் எனவும், தன்னிடம் இருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்” என்று நீதிபதி குறிப்பிட்டு விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி,  “நீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  என்னால் ஆன முழு ஒத்துழைப்பையும் நீதிமன்றத்துக்கு கொடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

3 மாதங்களுக்குள்  குற்றப் பத்திரிகை!

இந்நிலையில்…. இந்த வழக்கில் போலீஸ் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை அதாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.

போலீஸ் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது,

“ விஜயலட்சுமி கொடுத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது சீமான் தானா என்பது குறித்து விசாரிக்கப்படும்.

மேலும், போலீசிடம் வாக்குமூலம் கொடுத்தால்,  அது மிரட்டி வாங்கப்பட்டதாக சீமான் தரப்பு சொல்ல இடமுண்டு.  ஆனால் விஜயலட்சுமி திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜராகி 164 வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் சீமான் குறித்த பல உண்மைகளைத் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கும் தனக்கும் நடந்த உரையாடல்களை கொடுத்துள்ளார். அந்த குரல் சீமானுடையதுதானா என்று அறிவியல் பூர்வமாக சோதனை நடத்தப்படும்,.

அடுத்து தான் தொடர்ந்து கருக்கலைப்பு செய்திட சீமானே காரணம் என்று கூறியுள்ளார். எனவே இந்த அடிப்படையில் சீமானுக்கு ஆண்மை குறித்த மருத்துவ சோதனையும் விரைவில் நடத்தப்படும். இதெல்லாம் நடத்தி முடித்து 3 மாதங்களுக்குள்  குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்கிறார்கள். Vijayalakshmi sexual assault case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share