அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து அதற்கான அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். Trump’s designates English as the official language of the United States
இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் பல்வேறு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. சில மாநிலங்கள் ஆங்கிலம் மற்றும் பிற பூர்வீக மொழிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தாய்மொழி பேசுபவர்களின் அடிப்படையில் ஸ்பானிஷ், சீனம், பிரஞ்சு, தகலாக் மற்றும் வியட்நாமிய மொழிகள் அங்கு அதிகளவில் பேசப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தான், ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்கு உதவ அரசு ஆவணங்களை பல மொழிகளில் வெளியிட வேண்டும் என்று சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்தார்.
இதற்கு வரவேற்பு இருந்த அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமே நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என ஒரு குழு தொடர்ந்து வாதிட்டு வந்தது.
மேலும் கடந்த காலங்களில் சட்டமியற்றுபவர்கள் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து சட்டத்தை அறிமுகப்படுத்தினர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிப்பெயர்ப்பு நீக்கப்பட்டது.
இதற்கு அங்கு வசிக்கும் ஸ்பெயின் வம்சாவளியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, விரைவில் ஸ்பானிஷ் மொழிப்பெயர்ப்பை மீண்டும் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. ஆனால் நேற்று வரை அது மீட்டெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், ’ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக நிறுவுவது தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், பகிரப்பட்ட தேசிய மதிப்புகளை வலுப்படுத்தும். ஒருங்கிணைந்த மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்கும்” என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.