முதல்வர் மருந்தகம்… ஸ்டாலின் சொன்ன அந்த இரண்டு விஷயங்கள்!

Published On:

| By Selvam

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், B.Pharm, D.Pharm படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காகவும் முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) தெரிவித்தார். stalin importance mudhalvar marundhagam

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,

“குறைந்த விலையில் மருந்துகள்!

கல்வியும், மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கவும், சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி, அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்கக்கூடிய வகையில் உறுதிசெய்யவும், பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான், தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுச் சொன்னதுபோல கடந்த ஆகஸ்ட் 15 விடுதலை நாள் நிகழ்ச்சி கோட்டையில் நடைபெற்றபோது, கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில், முதல் கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தேன்.

அந்த அறிவிப்பு இன்றைக்கு செயல்பாட்டுக்கு வருவது பெருமகிழ்ச்சியை தருகிறது. நம்முடைய அரசு, சாதாரண, சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கு அடையாளம்தான், இந்த முதல்வர் மருந்தக திட்டம்.

தொழில் முனைவோருக்கு மானியம்!

பொதுமக்கள், தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை மாற்றவேண்டும். அவர்களின் சுமையை குறைக்கவேண்டும் என்று இந்த மருந்தகங்களை நாங்கள் திறப்பதற்கு திட்டமிட்டோம்.

Sugar, BP என்று சொல்லப்படக்கூடிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து, அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால், அதிகமான செலவு ஆகிறது என்று பலரும் கவலைப்பட்ட காரணத்தால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம்.

சொன்னது போன்றே, இன்றைக்கு ஆயிரம் மருந்தகங்களை திறந்திருக்கிறோம். இந்த மருந்தகங்களைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது.

இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள B.Pharm, D.Pharm முடித்தவர்களிடம் இருந்தும், இல்லை, அவர்கள் ஒப்புதலோடு தொழில்முனைவோர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு மூன்று லட்சம் ரூபாயும், கூட்டுறவுச் சங்கமாக இருந்தால் இரண்டு லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாவும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப உடனடியாக அனுப்புகின்ற வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் நெருக்கடி!

சாலிகிராமத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களில், மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான ஏசி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி என்று எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மருந்து தேவைப் பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனங்கள் மூலம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், B.Pharm, D.Pharm படித்த ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்று கேட்டால், இங்கு பொதுமக்களுக்கு 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக்கூடியவர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும்.

இந்தத் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திக் காட்டியிருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், துறையின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த திட்டங்களை நாங்கள் இன்று செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

இது எல்லாவற்றையும் மக்களுக்கான நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் நான் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த முதல்வர் மருந்தகங்கள் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்துகின்ற அந்த உறுதியை நீங்கள் எடுத்துக்
கொள்ளவேண்டும்.

இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. B.Pharm, D.Pharm படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share