அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்ஷனா ஆகியோரின் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி கோவையில் நடந்தது.
இந்த திருமணத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வராத நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் ஒன்று திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியது. அதேநேரம் திருமணத்தில் எடப்பாடி பழனிசாமியின் மனைவியும், மகனும் கலந்துகொண்டு வாழ்த்தினர். sp velumani son marriage
இந்த நிலையில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் ஏதோ நெருடல் இருப்பதாக வந்து கொண்டிருக்கிற தகவல்களுக்கு…. பதிலடி கொடுக்கும் வகையில், வரும் மார்ச் 10ஆம் தேதி எடப்பாடி தலைமையில் பிரம்மாண்டமாக தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் வேலுமணி.

கடந்த ஆறு மாதங்களாக தனது மகன் திருமணத்திற்கு திட்டமிட்டு வந்த எஸ்.பி. வேலுமணி, மார்ச் 10 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்வை அதிமுகவின் திருவிழாவாக கொண்டாட முடிவு செய்தார்.
அதாவது பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கோவை மாவட்ட தொண்டர்களும் கலந்துகொள்ளும் வகையில் கோவை கொடிசியாவில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் வேலுமணி.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்கே ஒரு மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளைக் கூட்டி, ‘நான் உங்கள் வீடு தேடி வரவேண்டும். ஆனால் அதற்கு நேரம் அதிகமாகும் என்பதால், உங்கள் மாவட்டம் தேடி வந்திருக்கிறேன், எனது மகன் திருமணத்தை பொதுச் செயலாளார் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் பெரு விழாவாகக் கொண்டாட இருக்கிறோம். நீங்கள் எல்லாம் அதற்கு வரவேண்டும்’ என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் பத்திரிகை வைத்தார். sp velumani son marriage

இவ்வாறு ஒரு மாவட்டத்துக்கு சுமார் 2 ஆயிரம் பத்திரிகைகள் வீதம் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும், பிற கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் அழைத்துள்ளார் வேலுமணி. கோவை ஒரு படி மேல் என்ற நிலையில், கோவை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஆயிரம் நிர்வாகிகள் வீதம் பத்து தொகுதிக்கு 10 ஆயிரம் பத்திரிகைகள் வைத்துள்ளார் வேலுமணி. பத்திரிகை மட்டுமல்ல… ஒவ்வொரு பத்திரிகையோடும் சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருளையும் சேர்த்தே கொடுத்து திருமண வரவேற்புக்கு அழைத்திருக்கிறார் வேலுமணி. sp velumani son marriage
இந்த அடிப்படையில் வரும் மார்ச் 10ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வேலுமணி சார்பில், கோவையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகள், சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது அல்லது மாநாடு நடக்கும்போது வைக்கப்படுகிற அளவுக்கு பிரம்மாண்டமான கட்ட அவுட்டுகள், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் கட் அவுட்டுகள் வைத்திருக்கிறார் வேலுமணி.

ஆயிரக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் சைவம்- அசைவ பந்திகளும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகின்றன.
‘அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் கட்சித் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக தன் வீட்டு திருமணத்தை கட்சி விழாவாக பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறார் வேலுமணி” என்கிறார்கள் கோவை அதிமுக நிர்வாகிகள்.