திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளார். Trichy library named Kamarajar
தமிழக சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “பொதுப்பணித்துறை சார்ந்த நான்கு ஆண்டுகள் சாதனை தொடர்பான புத்தகத்தில், ஏற்கனவே இந்த அவையில் அறிக்கப்பட்டவாறு திருச்சியில் ரூ.290 கோடி செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.
திமுக அரசை பொறுத்தவரை கலைஞரால் தொடங்கப்பட்ட கோட்டூர்புரம் நூலகத்திற்கு அண்ணா பெயரை வைத்தார். மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது. இதுவரை 16 லட்சம் பொதுமக்களும் மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்துள்ளனர். கோவையில் கடந்த நவம்பர் மாதம் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த மாதம் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினேன். அந்த பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்.
தமிழகத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை தொடங்கி மதிய உணவை அளித்து லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்வி கண்களை திறந்து தமிழ்நாட்டின் கல்வி புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். இதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக வெளியிட வேண்டும் என்று முதல்வர் என்ற முறையில் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். Trichy library named Kamarajar