தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளார். Edappadi Palaniswami condemns Dmk
மறைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து அதிமுக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது,
“அதிமுக ஆட்சி இருந்தவரை ஜெயலலிதா பிறந்தநாளை மாநில பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்தோம். அதிமுக ஆட்சியின்போது, பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது.
ஆனால், இன்றைக்கு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது. அதிமுக ஆட்சி இருந்தவரை பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினோம். அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுத்தோம். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது.
ஆனால், அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நாம் நாள்தோறும் ஊடகங்களில் பார்க்கிறோம். பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் கலங்கப்படுத்துகிறது.
பெண் குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு திமுக அரசு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். Edappadi Palaniswami condemns Dmk