வைஃபை ஆன் செய்ததும், ஏப்ரல் 2 ஆம் தேதி மதுரையில் தொடங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பற்றிய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மார்ச் 28 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் வருகிற 2026 தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்று அறிவித்தார். இதற்கு பல்வேறு ரியாக்ஷன்கள் வந்துகொண்டிருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின், எப்போதுமே ஆளுங்கட்சி திமுகதான், இரண்டாவது இடத்துக்குதான் விஜய்க்கும் எடப்பாடிக்கும் இடையே போட்டி நடக்கிறது என்று குறிப்பிட்டார். அதேபோல திமுக கூட்டணியில் இருக்கிற திருமாவளவனும் திருவண்ணாமலையில் நடந்த கட்சி அங்கீகார வெற்றி விழாவில் இரண்டாம் இடத்துக்காகவே விஜய், எடப்பாடி, அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாங்கள் தெளிவாக கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என முதல்வர் தொடர்ந்து கூறி வரும் சூழலில்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து கவனிக்க முடிகிறது.

வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது காங்கிரஸ் அதாவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்கால திசைவழி மற்றும் கொள்கைகள் குறித்து மத்திய பாஜக அரசின் மதவெறி நிகழ்ச்சி நிரலை எவ்வாறு முறியடிப்பது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை அடகு வைக்கப்படுவதை எவ்வாறு தடுப்பது? நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது?தொழிற்சங்க உரிமைகள் மற்றும் மாநில உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது? என்பது குறித்து அடுத்த 3 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களை தீர்மானிக்கக்கூடிய மாநாடாக மதுரையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த மாநாட்டிலும் மாநில உரிமை பாதுகாப்பு சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில்… இந்த 24 ஆவது அகில இந்திய மாநாட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ மற்றும் மத்தியக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் சுற்றுக்கு விட்டுள்ள சுற்றறிக்கை, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளியே இருக்கும் இடது சாரிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
காரணம், ‘நாம் மோடி அரசாங்கத்தை பாசிச அல்லது நவ-பாசிச அரசாங்கம் என்று கூறுவதில்லை. இந்திய அரசை ஒரு பாசிச அரசு என்று வகைப்படுத்தவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அரசியல் முன்னணியான மோடி அரசாங்கத்தின் தொடர்ச்சியான பத்தாண்டுகால ஆட்சிக்குப் பிறகு பாஜக – ஆர்.எஸ்.எஸ். கையில் ஆட்சி குவிந்திருக்கிறது என்பதையும் இதன் விளைவாக ‘நவ-பாசிச குணாம்சங்கள்’ வெளிப்படுவதையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்” என்று அந்தக் குறிப்பு கூறுகிறது.

இதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி 2024 செப்டம்பர் 12 மரணமடைந்த நிலையில், அவருக்குப் பின் செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் தேர்வு செய்யப்பட்டார். காரத் வந்ததும் மோடி ஆட்சியின் மீதான காரத்தை குறைத்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
தேசிய அளவில் இப்படியென்றால்… அகில இந்திய மாநாடு நடக்கும் மதுரை அமைந்துள்ள தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற குரல்களும் தமிழ்நாட்டுக்குள் எழுந்துள்ளன.
பொதுவாகவே சீதாராம் யெச்சுரி திமுகவோடு இணக்கமாக இருப்பவர் என்றும், பிரகாஷ் காரத் திமுகவோடு அவ்வளவு இணக்கம் காட்டாதவர்… சற்று எதிர் முனையிலேயே இருப்பவர் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே சொல்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் 2021 தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அதற்கு திமுக கூட்டணியில் வாய்ப்பிருக்குமா? ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளிலேயே திமுகவை அதிகம் எதிர்த்து போராட்டம் நடத்தியது சிபிஎம் தான்.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த காலணி ஆலை கடலூர் மாவட்டத்தில் அமைய இருக்கிறது. அது விவசாய நிலத்தில் அமையக் கூடாது என்று சிபிஎம் கடுமையாக போராட்டம் நடத்தியது. மாநில செயலாளர் சண்முகமே கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் விவகாரத்தில் திமுக மீது கடுமையான அதிருப்தியில் மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது. சாம்சங் விவகாரத்திலும் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி என்ற வகையில் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுத் தர முடியவில்லை. இந்த நிலையில் காரத் தலைமையிலான பொலிட் பீரோ தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
திமுக கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்களை அளித்தது. அதை விட அதிக இடங்களில் 2026ல் போட்டியிட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட்டின் தமிழக செயல் திட்டம்.

இந்நிலையில் வரும் அகில இந்திய மாநாட்டுக்குப் பிறகு திமுகவுக்கு எதிரான கட்சியின் போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் தோழர்கள்.
மேலும் திமுகவுடன் கூட்டணியில் தொடர இயலாத சூழல் ஏற்பட்டால்… அதிமுக- பாஜகவுடன் அணிசேர்ந்துவிடும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி விஜய்யோடு அணி சேரக் கூட பூர்வாங்க ஆலோசனைகள் நடக்கத் தொடங்கிவிட்டன என்கிறார்கள். விஜய்க்கும் இது ஒரு கௌரவமாக இருக்கும். திமுக கூட்டணியை உடைத்தது போலவும் இருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி அதிக இடங்களில் போட்டியிடவும் வாய்ப்பிருக்கும் என்பது உள்ளிட்ட கூறுகளோடு இந்த ஆலோசனைகள் ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.