தமிழக எம்.பி-க்கள் குறித்து தான் பேசிய வார்த்தைகளை திரும்ப பெறுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் இன்று (மார்ச் 10) தெரிவித்துள்ளார். Dharmendra Pradhan withdraw words
மக்களவையில் இன்று பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமே அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்” என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதனால் கோபமடைந்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மத்திய அமைச்சர் தனது வார்த்தையை திரும்ப பெற வேண்டும். தமிழக எம்.பி-க்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து, “தமிழக எம்.பி-க்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தியிருந்தால் அதை திரும்ப பெறுகிறேன். மற்றபடி தேசிய கல்வி கொள்கை பற்றி நான் பேசியதில் எந்த மாற்றமுமில்லை” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “அரசியல் காரணங்களுக்காக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைய மறுக்கிறார்கள். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் அறிவியல், தாய் மொழி முன்னிலை படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தமிழ் மொழி மட்டுமே பயிற்று மொழியாக உள்ளது. திமுகவினருக்கு இதில் என்ன தான் பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை.
பஞ்சாப், கர்நாடகா போன்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கூட பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் தேசிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
திமுக எம்.பி-க்களிடம் உண்மையில்லை. அதனால் தான் நாடாளுன்றத்தில் நான் பேசும்போது அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு பரபரப்பை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை” என்று தெரிவித்தார். Dharmendra Pradhan withdraw words