தமிழக மக்கள் நாகரிகமற்றவர்களா? ஒன்றிய அமைச்சர் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By Kavi

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி காசியில் தமிழ்நாட்டுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று மார்ச் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடே போராட்டக் களமாக மாறி வருகிறது.

2025-26ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 10) நாடாளுமன்றத்தில் தொடங்கியது. Are the people of Tamil Nadu uncivilized

கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்,  “தமிழ்நாடு அரசுக்கு கல்வி துறை மூலம் வழங்க வேண்டிய சுமார், ரூபாய். 2000 கோடி நிலுவையில் உள்ளது, அதனை உடனடியாக வழங்க வேண்டும்.   புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தவில்லை என்பதற்காக நிதியை மறுக்க கூடாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,   “ஒரு கட்டத்தில் தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது.  தமிழக எம்.பி.க்கள், மாநில கல்வித்  துறை அமைச்சருடன் வந்து என்னை சந்தித்து பேசினர். ஆனால் இப்போது தமிழ்நாடு அரசு யு டர்ன் அடிக்கிறது.  சூப்பர் முதல்வரின் ஆலோசனையை கேட்டு யு டர்ன் அடிக்கிறார்கள்.  

திமுக எம்.பி.க்கள் தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தமிழக மக்கள் விஷயத்தில் அக்கறையாக இல்லை.  அவர்கள் நாகரிகமற்றவர்கள். முதலில் உறுதி கொடுத்துவிட்டு தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழிக்கு தடை போடுவது மட்டுமே அவர்களது வேலை. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள்” என்று கடுமையாக குற்றம்சாட்டினார். 

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு சிறிது நேரத்துக்கு பின் கூடியது. 

அப்போது பேசிய  திமுக எம்.பி.கனிமொழி,  தர்மேந்திரன் பிரதான் பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். 

“இன்று வலியோடு இருக்கிறேன்.  அமைச்சரின்  பதில் வலியையும், வேதனையையும் தருகிறது.  தமிழக எம்.பி.க்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என்று எம்.பி கூறுகிறார். நாங்கள் எஸ்.எஸ்.ஐ நிதி தொடர்பாகத்தான் அமைச்சரை சந்தித்தோம். எங்களுடன் தமிழக கல்வி அமைச்சரும் வந்தார்.  எங்களுக்கு புதிய கல்விக் கொள்கையில் பிரச்சினை இருக்கிறது. அதை முழுவதுமாக எங்களால் ஏற்க முடியாது.  ஏனெனில் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசால் ஏற்க முடியாது.  எங்கள் மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்குங்கள் என்றுதான் அப்போது அமைச்சரிடம் தெரிவித்தோம்.   திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை” என்று காட்டமாக பதிலளித்தார் கனிமொழி. 

கனிமொழி எம்.பி.க்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான்,  “எனது மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர், எனது சகோதரி கனிமொழி 2 விஷயங்களை எழுப்பி இருக்கிறார். நான் தமிழக எம்.பி.க்களை, மக்களை நாகரிகமற்றவர்கள் என்று சொன்னதாக கூறுகிறார். அவ்வாறு நான் சொல்லவில்லை. எனினும், நான் எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்றார். 

பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக அவர்கள் என்னோடு பல முறை பேசி இருக்கிறார்கள் என்று மீண்டும் குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான்,  “ஒரு கட்டத்தில் அவர்கள் இந்த திட்டத்தை ஒப்புக்கொண்டார்கள். தமிழ்நாட்டு முதல்வரும் ஒப்புக்கொண்டார். பிறகு அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள்.  பாஜக அல்லாத மாநிலங்களோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கும் நிதி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில் தமிழகத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்ததை கவனித்துக்கொண்டே இருந்த முதல்வர் ஸ்டாலின், தர்மேந்திர பிரதானுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார். 

அவர் தனது சமூக தளப் பக்கத்தில்,  “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான், நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!

நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத எங்களை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். 

அதில்,   30.08.2024 அன்று  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனக்கு எழுதிய கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். 

அக்கடிதத்தில், “அதில், பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரதமரின் ஸ்ரீ (PM SHRI – Prime minister Schools for Rising India) திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு இன்னும் கையெழுத்திடவில்லை” என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிடப்பட்டுள்ளதை அடையாளப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில்… தமிழ்நாடு முழுதும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். Are the people of Tamil Nadu uncivilized

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share