மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் போர்டு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பிறகு மீண்டும் இன்று ( ஏப்ரல் 2) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக இன்று விவாதம் நடந்து வருகிறது. இவ்விவாதத்தில் திமுக சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா பேசியபோது நாடாளுமன்றமே அதிர்ந்தது.
வக்ஃப் சட்ட மசோதாவை பற்றி ஆராய்ந்த, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஆ.ராசாவும் இடம்பெற்றிருந்தார். பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற கூட்டுக் குழுக் கூட்டங்களில் பங்கேற்றார் ஆ.ராசா. A Raja dares Minister Kiren Rijiju
இந்நிலையில் இன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு நேருக்கு நேர் நின்று சவால் விட்டார் ஆ.ராசா.
“இந்த மதச்சார்பற்ற நாடு நமது முன்னோர்களால் செம்மையாக எழுதப்பட்ட அரசியலமைப்பின் பாதையில் பயணிக்கப் போகிறதா? அல்லது, வகுப்பு வாத சக்திகள் தீர்மானிக்கும் எதிர்மறைப் பாதையில் பயணிக்கப் போகிறதா என்பதை முடிவு செய்யும் நாள் இன்று.
இங்கே அமைச்சரின் (கிரண் ரிஜிஜு) தைரியமான பேச்சைக் கேட்டேன். அவருக்கு இப்படி துணிச்சலாக பேச தைரியம் எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்படுகிறேன். இப்படிப்பட்ட கட்டுக் கதைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எப்படி தைரியம் வந்தது?
நான் அமைச்சருக்கு நேருக்கு நேர் சவால் விடுகிறேன். நீங்கள் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது அவையில் பேசிய பேச்சை எழுத்து வடிவில் தொகுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்… ஜேபிசியின் அறிக்கையில் என்ன இருக்கிறது என இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டும் டேலி ஆனால், அதாவது பொருந்தியிருந்தால் நான் இந்த அவையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுகிறேன்” என்று ஆ.ராசா பேசும்போது கிரண் ரிஜிஜுவின் முகம் இறுக்கமானது.
தொடர்ந்த ஆ.ராசா, “ வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்யும்போது நீங்கள் சொன்ன ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கைவிடப்பட்ட சொத்துகள் இருப்பதாக தெரிவித்தீர்கள்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு தமிழகத்துக்கு சென்று பார்த்து விசாரணை நடத்தியது. அந்த கிராமத்தை உள்ளக்கிய பகுதியின் மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் வந்து, குழுவின் தலைவரை சந்தித்து நீங்கள் (அமைச்சர்) நாடாளுமன்றத்தில் சொன்னது கட்டுக் கதை என்பதை நிரூபித்தார்கள். உங்கள் கட்டுக் கதைகள் அடித்து நொறுக்கப்பட்டன. A Raja dares Minister Kiren Rijiju
அப்படியாப்பட்ட நீங்கள் இப்போது நாடாளுமன்ற கட்டிடமே வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் என்று புதிய கதை விடுகிறீர்கள்,
இதில் என்ன கொடுமை என்றால்…ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லாத ஒரு கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கப் போவதாக எங்களுக்கு பாடம் நடத்துகிறது.
இந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியலமைப்புக்கும் எதிரானதாக இருக்கிறது. இது தொடர்பாக எங்களது தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார்.
இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கிறது. எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எங்கள் நிலைப்பாடு” என்று குறிப்பிட்டார் ஆ.ராசா.
இந்த மசோதாவை கடந்த 2024 இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தமிழ்நாட்டில் திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் பல ஏக்கர் இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு பேசினார். A Raja dares Minister Kiren Rijiju
அதைத்தான் இன்று ஆ.ராசா கட்டுக் கதை என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிக்கை மூலமாக வெளிப்படுத்தினார்.