ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பிஎஃப் பணத்தை, தேவையான நேரத்தில் எடுக்க சில விதிமுறைகள் உள்ளன.
தற்போது EPFO, பகுதியளவு பணம் எடுப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அவற்றை மூன்று முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவம், கல்வி, திருமணம், வீடு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் எடுப்பது குறித்து உறுப்பினர்கள் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
மருத்துவச் செலவுகளுக்கு வரம்பில்லை
மருத்துவ சிகிச்சைக்காக பிஎஃப் முன்பணம் பெறுவதில் எண்ணிக்கை வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. உறுப்பினர் அல்லது குடும்பத்தினரின் சிகிச்சைச் செலவுகளுக்குத் தேவையானபோது, விதிகளுக்கு உட்பட்டு இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
கல்வி, திருமணத்துக்கு எத்தனை முறை?
கல்விச் செலவுகளுக்காக அதிகபட்சம் 10 முறை பிஎஃப் முன்பணம் பெறலாம். திருமணச் செலவுகளுக்கு அதிகபட்சம் 5 முறை பணம் எடுக்க அனுமதி உள்ளது. முன்பு இருந்த வரம்புகளுடன் ஒப்பிடும்போது இது கூடுதல் நெகிழ்வை வழங்குகிறது.
வீடு வாங்கவும், கடன் செலுத்தவும் பணம் எடுக்கலாம்
வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல், மனை வாங்கி வீடு கட்டுதல், வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல், பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற தேவைகளும் வீட்டு வசதி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் அதிகபட்சம் 5 முறை முன்பணம் பெறலாம்.
12 மாத உறுப்பினர் காலம் முக்கியம்
பகுதியளவு பிஎஃப் பணத்தைப் பெற, குறைந்தபட்சம் 12 மாதங்கள் EPF உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். பொருந்தும் விதிகளின்படி, கணக்கில் உள்ள தகுதியான தொகையில் 75% வரை முன்பணமாகப் பெற முடியும். எனினும், இது வேலை விட்டு வெளியேறிய பிறகு பெறப்படும் இறுதி PF செட்டில்மென்ட் தொகையிலிருந்து வேறுபட்டது.
