சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi-யின் இந்திய வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த இந்தியாவின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) பரிந்துரை செய்துள்ளது.
நிறுவனத்தின் வர்த்தக நடைமுறை, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு விதிகளைப் பின்பற்றியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறலாம்.
முதலீட்டு விதிகள் குறித்து ஆய்வு
2020-ல் இந்தியா-சீனா இடையே எல்லைப் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டு வந்தது. இதன்படி சில முதலீடுகளுக்கு முன்கூட்டியே அரசு அனுமதி பெறுவது கட்டாயமானது.
Xiaomi-யின் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உண்மையான உரிமையாளர் யார், நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா, அவை முறையாக அரசிடம் தெரிவிக்கப்பட்டதா என்பதையும் SFIO ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.
அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் பரிந்துரை
Xiaomi India மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான விசாரணைக்கான பரிந்துரை தற்போது மத்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. விசாரணை தொடங்குமா என்பது குறித்து முடிவு எடுக்க குறிப்பிட்ட காலக்கெடு இல்லை.
இதற்கிடையே, SFIO பரிந்துரையில் 21 அம்சங்களை உள்ளடக்கிய விசாரணை திட்டம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
ஏற்கெனவே பல சிக்கல்களில் Xiaomi
இந்தியாவில் Xiaomi-க்கு இது புதிதாக உருவாகும் சவால் அல்ல. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ள நிலையில், ரூ.5,551 கோடி மதிப்பிலான இந்திய வங்கி சொத்துகள் 2022 முதல் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Xiaomi-யின் பங்கும் குறைந்துள்ளது. தற்போது 13 சதவீத சந்தைப் பங்குடன் நான்காவது இடத்தில் உள்ளதாக Counterpoint Research தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விற்பனை முறையும் விசாரணையில்
Amazon, Flipkart போன்ற தளங்களில் Xiaomi பொருட்கள் மேற்கொள்ளும் பிரத்யேக வெளியீடுகள் மற்றும் விற்பனை ஏற்பாடுகளும் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
இந்திய விற்பனையாளர்கள் மீது Xiaomi-க்கு மறைமுக கட்டுப்பாடு இருந்ததா, வெளிப்படையாக தனித்தனி நிறுவனங்களாகக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகள் உண்மையில் அப்படித்தானா என்பதையும் SFIO ஆராய உள்ளது. Xiaomi இதுவரை SFIO-விடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும், இந்திய சட்டங்களை முழுமையாகப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
SEO Tags:
Xiaomi India, Xiaomi Investigation, SFIO Probe, Xiaomi SFIO, Xiaomi India News, Foreign Investment Rules, Xiaomi Business India, FDI Rules, Xiaomi E-commerce, Indian Smartphone Market, Xiaomi Latest News
