பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக தம்மை 6 முறை செல்போனில் தொடர்பு கொண்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்ததை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ( O. Panneerselvam Vs Nainar Nagendran) நிராகரித்துள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வருகை தந்தார். பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாக, அவரை சந்திக்க தமக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என மிகவும் கெஞ்சி ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் ஓபிஎஸ்.
ஆனாலும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.
இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என என்னிடம் சொல்லி இருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என கூறியிருந்தார். இதற்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார்; அவரை செல்போனில் 6 முறை தொடர்பு கொண்டேன்; மெசேஜ் அனுப்பினேன். இதற்கு பதிலளிக்காத நிலையில் கடிதத்தை எழுதி பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன்; நயினார் நாகேந்திரன் உண்மையை மட்டும் பேச வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ்-ன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் கடிதம் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்; அந்த கடிதம் வந்து சேர்ந்த உடன் உங்களிடம் காட்டுகிறேன். அப்ப யார் உண்மையை சொன்னது? யார் பொய் சொன்னது என தெரிய வரும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை திடீரென ஓபிஎஸ் சந்தித்திருக்க முடியாது. ஏற்கனவே தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி முடிவு எடுத்திருக்க முடியும். ஆகையால் ஓபிஎஸ் பற்றி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு எடுத்துவிட்டு ஒரு காரணத்தை சொல்கிறார் ஓபிஎஸ். என்னை 6 முறை தொடர்பு கொண்டேன் என்று ஓபிஎஸ் சொல்வதுதான் ஆதாரம்; அதைத் தவிர அவரிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை.
முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்திப்பதற்கு முதல் நாள் நான்தான் அவரை தொடர்பு கொண்டேன். என்னை ஓபிஎஸ் குறை சொன்னாலும் அவரை நான் குறை சொல்லமாட்டேன் என்றார்.