அதிமுக கூட்டணியில் பாமக : மகிழ்ச்சியில் ஈபிஎஸ் – அன்புமணி கூட்டாக பேட்டி!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று பாமக தலைவர் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கூட்டணி உறுதியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஆட்சியில் பங்கு, தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி என அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த முறை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னைக்கு வந்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்த போது, இந்த கூட்டணியில் பாமகவுக்கு 23 சீட் ஒதுக்கலாம் என பேசப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று (ஜனவரி 7) சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகிய இருக்கட்சி நிர்வாகிகள் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது “அதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது” என்று அறிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எங்களுடைய கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. தொகுதி எண்ணிக்கை குறித்து முடிவு செய்திருக்கிறோம். மற்றவையெல்லாம் பின்னர் அறிவிக்கபப்டும்” என்றார்.

அன்புமணி பேசுகையில், “வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் பாமக இணைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியான தருணம். இது வலுவான கூட்டணி. எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம். மக்கள் விரோத, சமூக நீதிக்கு எதிரான, உழைக்கும் வர்க்கதினருக்கு எதிரான திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கிறோம். நான் நடைப்பயணம் மேற்கொண்ட போது, திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருப்பது தெரியவந்தது” என்று கூறினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share