அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பாமக குழு தற்போது சந்தித்து பேசி வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக- பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் இதுவரை இணையவில்லை.
அதிமுக, பாஜக ஆகியவை பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி பிரிவுகள் இரண்டுமே தங்களது கூட்டணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகின்றன. இது தொடர்பாக அதிமுக, பாஜக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.
ஆனால், பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக இடம் பெறும் போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பது குறித்து ராமதாஸ் பாமக ஆலோசித்ததாக நாம் பதிவு செய்திருந்தோம்.
இந்த பின்னணியில் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தமது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி வருகிறார். அன்புமணியுடன் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பின் முடிவில் அதிமுக- பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக இடம் பெறும் அறிவிப்பு வெளியாகக் கூடும்.
