ADVERTISEMENT

நான் தொடர்புகொள்ளவில்லையா? நயினார் சொல்வது பொய் : ஓ.பன்னீர் செல்வம்

Published On:

| By Kavi

உண்மைக்கு மாறான தகவல் வெளியிடுவதை தவிர்க்குமாறு நயினார் நாகேந்திரனிடம் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி நேற்று முன்தினம் வெளியேறியது. பிரதமர் தமிழ்நாடு வந்தபோது அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை என்று ஓபிஎஸ் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ஓபிஎஸ். அப்போது அரசியலில் எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க நான் நேரம் ஏற்படுத்தி கொடுத்திருப்பேன். அடுத்தமுறை பிரதமர் தமிழ்நாடு வரும்போது ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு பதிலளித்து ஓபிஎஸ் இன்று (ஆகஸ்ட் 2) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் “தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, அவரிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் நயினார் நாகேந்திரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, வைத்திலிங்கம் ,மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.

இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரை சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share