என்விடியா – க்ரோக் ஒப்பந்தம்! $20 பில்லியன் வதந்திக்கு முற்றுப்புள்ளி… ஆனால் ஒரு ‘ட்விஸ்ட்’!

Published On:

| By Santhosh Raj Saravanan

nvidia signs licensing deal with ai startup groq jonathan ross joins nvidia ai chips news

செயற்கை நுண்ணறிவு (AI) உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் என்விடியா (Nvidia), தனது சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுபடுத்த ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரபல ஏஐ சிப் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘க்ரோக்’ (Groq) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ் அன்று வெளியான இந்த அறிவிப்பு, டெக் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கையகப்படுத்தல் அல்ல… இது வேற!

ADVERTISEMENT

கடந்த சில வாரங்களாகவே, என்விடியா நிறுவனம் சுமார் 20 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்) கொடுத்து க்ரோக் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கப்போவதாக வதந்திகள் பரவின. ஆனால், நடந்திருப்பதோ வேறு. இது ஒரு முழுமையான கையகப்படுத்தல் (Acquisition) அல்ல; மாறாக இது ஒரு தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் (Licensing Deal) மற்றும் திறமையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கை (Acqui-hire).

என்விடியாவின் மாஸ்டர் பிளான்:

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தின் மூலம், க்ரோக் நிறுவனத்தின் அதிவேக ‘இன்ஃபரன்ஸ்’ (Inference) தொழில்நுட்பத்தை என்விடியா பயன்படுத்திக்கொள்ள முடியும். அதைவிட முக்கியமாக, க்ரோக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) ஜொனாதன் ராஸ் (Jonathan Ross) என்விடியாவில் இணைகிறார். இவர் கூகுளின் புகழ்பெற்ற ‘TPU’ சிப்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் க்ரோக் நிறுவனத்தின் முக்கியப் பொறியாளர் குழுவும் என்விடியாவிற்குச் செல்கிறது.

ஏன் இந்த ஒப்பந்தம் முக்கியம்?

ADVERTISEMENT

தற்போது ஏஐ மாடல்களை உருவாக்குவதில் (Training) என்விடியாவின் கிராபிக்ஸ் கார்டுகள்தான் (GPU) ராஜா. ஆனால், உருவாக்கப்பட்ட ஏஐ மாடல்களை வேகமாகச் செயல்படுத்துவதில் (Inference) க்ரோக் நிறுவனத்தின் சிப்கள் (LPU) அசுர வேகம் கொண்டவை.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், என்விடியா தனது பலவீனமான பகுதியை சரிசெய்வதுடன், சந்தையில் தனக்குப் போட்டியாக வளரக்கூடிய ஒரு நிறுவனத்தின் மூளையாகச் செயல்பட்டவரைத் தன் பக்கம் இழுத்துவிட்டது.

க்ரோக் நிறுவனத்தின் நிலை என்ன?

முக்கியத் தலைவர்கள் வெளியேறினாலும், க்ரோக் நிறுவனம் மூடப்படவில்லை. அது தொடர்ந்து ஒரு தனி நிறுவனமாகவே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி சைமன் எட்வர்ட்ஸ் புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்குச் சேவைகள் தடையின்றித் தொடரும்” என்று க்ரோக் உறுதி அளித்துள்ளது.

போட்டியாளர்களை வளர விடாமல் தடுப்பதிலும், சிறந்த தொழில்நுட்பத்தைத் தனதாக்கிக் கொள்வதிலும் என்விடியா எவ்வளவு உஷாராக இருக்கிறது என்பதற்கு இந்த ஒப்பந்தமே சாட்சி. ஜொனாதன் ராஸின் வருகை, என்விடியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share