சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் வழங்கிய கருப்பு-வெள்ளை அடையாள அட்டைக்கு பதிலாக ரூ.25 செலுத்தி வண்ண அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை மட்டும் வண்ணமாக இருப்பதாகவும், அதில் உள்ள புகைப்படம் வண்ணமாக இல்லாததாலும் வாக்காளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் வண்ணப் புகைப்படங்களை சமர்ப்பித்தாலும், அது கருப்பு வெள்ளையில் ஸ்கேன் செய்யப்பட்ட அடையாள அட்டையாகவே உள்ளதால், செலுத்தப்படும் 25 ரூபாய்க்கு எந்த பலனும் இல்லை என்று பல்வேறு அமைப்புகள் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.









