எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் முதல்வர் விஜய் துணிச்சலாகச் செய்துள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் த.வெ.க. அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று தி.மு.க. சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படும் நிலையில் அவரது கைதைக் கண்டித்து தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தச் சூழலில் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ, அதைத்தான் தமிழக முதல்வர் விஜய் துணிச்சலாகச் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உதயநிதி கொச்சையாகப் பேசியபோதும், அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
பெண்களுக்கு எதிராக இன்று யார் அநாகரிகமாகப் பேசினாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இந்த த.வெ.க. அரசு எந்தவித தயவு தாட்சணியமும் இன்றி சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதில் ஏதாவது ஒரு வார்த்தை ஏற்புடையதாக உள்ளதா என்பதை தி.மு.க-வினர் தங்கள் வீடுகளில் போட்டுக் காட்ட வேண்டும். இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசிய உதயநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அல்ல, ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்கக் கூடத் தகுதி இல்லை.” இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
