பொதுமக்களின் ஆதார் கார்டு விஷயத்தில் பெரிய மாற்றம் வந்துள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்று இங்கே நீங்கள் பார்க்கலாம்.
ஆதார் கார்டில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய டிஜிட்டல் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆதார் சரிபார்க்கக்கூடிய சான்றிதழ் (Aadhaar Verifiable Credential – AVC) என்று பெயர். இது ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்பை வலுப்படுத்தும்என்று கூறப்படுகிறது. மேலும், தனிநபர்களின் தரவுகள் வெளிப்படுவதைக் இது குறைக்கும். இந்த புதிய விதிமுறைகள் டிசம்பர் 9 அன்று அறிவிக்கப்பட்டு, UIDAI இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் இது புதுப்பிக்கிறது. இந்த AVC முறை, ஆதார் எண்ணை முழுமையாக வெளிப்படுத்தாமலேயே அடையாளத்தை சரிபார்க்க உதவுகிறது.
புதிய விதிகளின்படி, ஆதார் சரிபார்க்கக்கூடிய சான்றிதழ் (AVC) என்பது, ஆதார் எண் வைத்திருப்பவருக்கு ஆணையத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணமாகும். இதில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள், பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆதார் வைத்திருப்பவரின் புகைப்படம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இருக்கலாம். இந்த தகவல்களை ஆதார் வைத்திருப்பவர், அடையாளத்தை சரிபார்க்கும் நிறுவனத்துடன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், பயனர்கள் தாங்களுடைய எந்தெந்த தகவல்களைப் பகிர வேண்டும் என்பதைத் தாங்களே கட்டுப்படுத்தலாம். விரைவில் வரவிருக்கும் ஆதார் மொபைல் செயலி மூலம் இதைச் செய்ய முடியும் என்று UIDAI கூறியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ‘ஆஃப்லைன் முக சரிபார்ப்பு’ (Offline Face Verification) என்ற முறையையும் அறிமுகப்படுத்துகின்றன. இதன் மூலம், நிறுவனங்கள் ஒருவரின் நேரடி முகத்தை, ஆதார் செயலியில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு அடையாளத்தை சரிபார்க்க முடியும்.
மேலும், ‘ஆதார் செயலி’ என்பதற்கான அதிகாரப்பூர்வ வரையறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இது UIDAI-யின் செயலிகள் மற்றும் இணையதளங்களை உள்ளடக்கும். பழைய ‘mAadhaar‘ என்ற குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. காகிதமில்லா மின்னணு அடையாளப் பகிர்வை எளிதாக்குவதற்கும், ஆதார் அட்டைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வர் குமார் கூறுகையில், “புதிய செயலி ஆதார் பயன்பாட்டை அச்சிடப்பட்ட நகல்களிலிருந்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த நகல்கள் பெரும்பாலும் நகலெடுக்கப்பட்டு தவறாக சேமிக்கப்படுகின்றன அல்லது சரிபார்ப்பு நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்பை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான பதிவு முறைமையும் இந்த திருத்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், UIDAI-க்கு கூடுதல் தகவல்களைக் கேட்கவும், விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பதிவுகளை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் அளிக்கின்றன. பதிவு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் UIDAI-க்கு வழங்கப்பட்டுள்ளது.
