இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடத் தயாராகும் இந்தியக் குடும்பங்களுக்கு, வழக்கத்தைவிட கூடுதல் செலவுகள் காத்திருக்கின்றன.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, விமானக் கட்டண உயர்வு எனப் பல்வேறு சுமைகள் மக்களின் குடும்ப பட்ஜெட்டைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன.
வளைகுடா போர் பதற்றத்துக்குப் பிறகு வரும் முதல் தீபாவளி என்பதால், அத்தியாவசியச் செலவுகளுக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும் இடையே மக்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதன் தாக்கம் ஆன்லைன் விற்பனையிலும் தெரியத் தொடங்கியுள்ளது.
5.54% ஆக உயர்ந்த சில்லறைப் பணவீக்கம்!
2026 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவுப் பணவீக்கம் 7.74 சதவீதத்தை எட்டியுள்ளது. காய்கறிகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
இதனால், குடும்பங்கள் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை அன்றாடத் தேவைகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. ஆடைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றுக்கான செலவுகளைச் சுருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கிலும் மந்தநிலை!
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் பண்டிகைக்கால விற்பனை தொடங்கிய முதல் நான்கு நாட்களில், மொத்த விற்பனை மதிப்பு ரூ.29,800 கோடி முதல் ரூ.30,900 கோடி வரை இருந்ததாக Datum Intelligence தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த மதிப்பு ரூ.33,200 கோடியாக இருந்தது.
மேலும், ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக மின்னணுப் பொருட்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றின் விலை சமீபத்திய மாதங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத் தள்ளுபடிகளும் கடந்த ஆண்டைவிட 35 முதல் 40 சதவீதம் குறைந்துள்ளதாக நிறுவனத் தரப்பினர் கூறியுள்ளனர்.
இனிப்புகளின் விலையும் உயர்கிறது!
தீபாவளியின் முக்கிய அங்கமான இனிப்புகள் வாங்குவதற்கும் இந்த ஆண்டு கூடுதல் செலவிட வேண்டிய நிலை உள்ளது. செப்டம்பரில் சர்க்கரையின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 29.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இனிப்பு வகைகள் தொடர்பான பணவீக்கம் 13.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உணவகங்களுக்கும் செலவுகள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் வாடிக்கையாளர்களின் வாங்கும் செலவிலும் பிரதிபலிக்கிறது.
சொந்த ஊருக்குச் செல்வதும் செலவு அதிகம்!
தீபாவளிக்கு குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கும் விமானக் கட்டண உயர்வு சுமையாக மாறியுள்ளது.
OAG விமானப் போக்குவரத்து ஆய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, பண்டிகை மற்றும் ஆண்டு இறுதிப் பயணங்களுக்கான விமானக் கட்டணங்கள் கடந்த ஆண்டைவிட 68 சதவீதம் அதிகரித்துள்ளன.
இதனால், பயணத்தைத் தவிர்ப்பது, தங்கும் நாட்களைக் குறைப்பது அல்லது ரயில் உள்ளிட்ட மாற்றுப் போக்குவரத்தைத் தேர்வு செய்வது குறித்து குடும்பங்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளியில் மக்கள் செலவுகளைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பண்டிகைக் கொண்டாட்டங்களையும் குடும்ப பட்ஜெட்டையும் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதே சில்லறை வர்த்தக நிறுவனங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
