சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸிலுள்ள டிங்ரி பகுதியில் இன்று (ஜனவரி 7) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் சீன அரசு 6.8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திலும் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், காத்மாண்டுவில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பிகார், டெல்லி மற்றும் வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்துக்கு இதுவரை 53 பேர் பலியாகியுள்ளனர். 68 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது. திபெத்தில் அடுத்தடுத்து நில நடுக்கம் தாக்குவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்