சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெரும்பாலானோர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். naan mudhalvan scheme
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தை தொடங்கினார். யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வின் மூலம் 10 மாதங்களுக்கு தலா 7,500 ரூபாயும், முதன்மை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 23) வெளியான நிலையில் இதில் 50க்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக இன்று (ஏப்ரல் 23) சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், யுபிஎஸ்சி தேர்வு முடிவு ஒட்டுமொத்த தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்த நிலையில் 2016 க்கு பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து 2021ல் 27 பேர் மட்டுமே குடிமை பணிகள் தேர்வில் தேர்வு பெற்றார்கள்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது. சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் செயல்படும் இந்த பிரிவுக்காக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 47 தமிழக மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்கள்.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்க தொகை பெற்றவர்கள்.
அதிலும் குறிப்பாக 18 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், யுபிஎஸ்சி நேர்முகத் தேர்விற்காக டெல்லி செல்லும் தமிழக மாணவர்களின் பயிற்சி மற்றும் பயண செலவிற்காக தலா 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற வரலாற்றை மீண்டும் நிலைநாட்டும் வகையில் நான் முதல்வன் திட்டம் இதே உறுதியோடு செயல்படும்” என்று கூறி ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் பணிகளுக்கு தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். naan mudhalvan scheme
