திமுக மீது வைகோ பட்டியல் போட்டு பகிரங்க தாக்கு! விசிக மீதும் விமர்சனம்!

Published On:

| By Mathi

MDMK Vaiko's Open Attack on DMK: Criticism on VCK as well

”திமுக கூட்டணியில் 9 ஆண்டுகள் மதிமுக சுயமரியாதை இழந்து நின்றது” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜபாளையத்தில் ஜூன் 25-ந் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: அரசியல் ரீதியாக, ஒரு விளிம்பிலே வந்து நாங்கள் நிற்கிறோம். விளிம்புக்கு அப்பால் அதல பாதாளம். விளிம்பில் இருந்து பின்னோக்கி வந்தால், ஒருவேளை சோபிக்கின்ற எதிர்காலம். இன்னது ஒன்று எது நடக்கும் எனக்குத் தெரியாது; இயற்கை விதித்தபடி நடக்கும்.

ADVERTISEMENT

ஆனால் ஒன்றைச் சொல்வேன். எந்தக் கூட்டணியில் இருந்தாலும், அந்த கூட்டணியை குன்றின் மேலிட்ட விளக்காக நான் உயர்த்திப் பிடித்தவன் நான். அவர்களை வெற்றியடைய வைத்தவன் நான்.

என் அளவுக்கு திமுக-வைப் பாராட்டிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாராவது உண்டா? மேடைக்கு மேடை, கூட்டத்திற்கு கூட்டம், கட்சியை, திமுக-வை, அதன் தலைவரை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். திராவிட இயக்க வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன். ஒரு வார்த்தை இந்த 9 வருஷத்தில விமர்சித்தது கிடையாது. மற்றவர்கள் விமர்சித்தார்கள், கூட்டணியில் இருந்தவர்கள்; மதிமுக விமர்சித்தது கிடையாது. அவர்களைத் தூக்கிப் பிடித்தேன் உயரத்தில்.

ADVERTISEMENT

”தலைவர் என்ன இப்படிப் பாராட்டியிருக்கிறார்” என்று என் மேல ரொம்ப கோபபட்டவர்களும் உண்டு. இருக்கிற இடத்திற்கு நான் விசுவாசமாக இருந்திருக்கிறேன். நாங்கள் கனவிலும் வஞ்சகம் நினைத்ததில்லை.

விசிக மீது விமர்சனம்

ஆனால், எங்களை விட பலமில்லாத கட்சிகளுக்கு அதிக இடங்கள். எங்கள் கட்சிக்கு எல்லா ஊரிலும் பத்து பேராவது இருக்கிறார்கள். அப்படி கிளைகள் இல்லாத கட்சிக்கு (விசிக) 8 இடங்கள்; கட்சியே காணாமல் போகும் என்று இருந்த கட்சிக்கு (தேமுதிக) 10 இடங்கள், பிளஸ் ராஜ்யசபா சீட். எங்களுக்கு அதெல்லாம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

ADVERTISEMENT

ஆனால் நாங்க நடத்தப்பட்ட விதம், ‘எங்க சின்னத்துல தான் நிற்க வேண்டும்’ என்றார். மற்ற கட்சிகள் தனித்தனி சின்னத்தில் நிற்கிறதே.. விடுதலைச் சிறுத்தைகள் நிற்கிறாங்க, கம்யூனிஸ்ட் கட்சிகள் நிற்கிறாங்க, முஸ்லிம் லீக் நிற்கிறது, தேமுதிக நிற்கிறது. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை? இல்லை, இல்லை, ”எங்க சின்னத்துல தான் போட்டியிடனும்” என்றார்கள். அதனால் வேறு வழியில்லாம நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எங்கள் சுயமரியாதையை, தன்மானத்தை கொஞ்சம் இழந்துவிட்டுத்தான் ஒன்பது வருடம் நான் கூட்டணியில் இருந்தேன். இவ்வாறு வைகோ பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share