விமர்சனம்: ஃபுட்டேஜ்!

Published On:

| By Kavi

உதயசங்கரன் பாடகலிங்கம்

இது மஞ்சு வாரியார் படமா?

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் முகம் காட்டுகிற நடிகர்களோ, நடிகைகளோ வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமல்ல. சிறப்பான திட்டமிடலும் சரியான படத் தேர்வுகளும் அதற்கு அவசியம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக நம் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை மஞ்சு வாரியார். தற்போது அவர் நடித்துள்ள ‘ஃபுட்டேஜ்’ படம் வெளியாகியிருக்கிறது.

சைஜு ஸ்ரீதரன் இயக்கியுள்ள இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ படுபயங்கரமாக வைரல் ஆனது. ஆனால், அதில் நாயகன் விஷாக் நாயருடன் இடம்பெற்றது காயத்ரி அசோக் எனும் நடிகை. மேலும் ‘ஃபுட்டேஜ்’ என்கிற பெயரும் இப்படம் குறித்த பல கற்பனைகளை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.

இந்தப் படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை வழங்குகிறது?

விளாக்கர்களின் கேமிரா பார்வை!

ஒரு காதல் ஜோடி. அவர்கள் வசதியான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு பிளாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் இருவருமே விளாக்கர்கள். தங்களது தினத்தின் முக்கியமான தருணங்கள் அனைத்தையும் படம்பிடித்து, யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகின்றனர்.

2020 – 2021 காலகட்டத்தில் கோவிட் பாதிப்புக்கு முன்னும் பின்னும் அந்த ஜோடி சில மனிதர்களைச் சந்திக்கிறது. அவர்களை தங்களது கேமிராவில் பதிவு செய்கிறது; அவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுகிறது.

இந்த நிலையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண் வினோதமாகத் தென்படுவதாக அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் வசிக்கும் வீட்டின் நேராகக் கீழே உள்ள பிளாட்டில் அவர் வசிக்கிறார்.

அந்தப் பெண்மணி ஒரு மருத்துவர். பிறருக்கு உதவ வேண்டுமென்ற மனப்பான்மை கொண்டவர்.

ஒருமுறை பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்ணொருத்தியைத் தனது வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். அந்தப் பெண்ணின் வீட்டினர் அவரைக் கைவிட்ட காரணத்தால், அவருக்குச் சிகிச்சையளிக்கிறார்.

இரண்டு மாதங்கள் கழித்து, அந்தப் பெண் குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், யாரோ அவரைத் தள்ளிவிட்டதாக அக்குடியிருப்பில் உள்ளவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

அதன்பின்னர் அந்த பாலியல் அத்துமீறல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் காணாமல்போனதாகவும் செய்தி வருகிறது.

இந்த தகவலை எல்லாம் அந்த விளாக்கர் தம்பதிக்கு ஒரு வேலைக்காரப் பெண்மணி சொல்கிறார். அவர்தான், அந்த பெண் மருத்துவரின் வீட்டிலும் வேலை செய்து வருகிறார்.

ஒருநாள் அந்த மருத்துவர் இல்லாத நேரத்தில், அந்த வீட்டுக்குள் விளாக்கர் ஜோடி புகுகிறது. அதனைப் படம்பிடிக்கிறது. அந்த வீடியோவை பார்க்கையில், அந்த வீட்டினுள் இன்னொரு பெண் ஒரு அறையில் இருப்பது தெரிய வருகிறது. அந்தப் பெண் யார்?

அன்றிரவு, கீழ் தளத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக அந்த ஜோடி உணர்கிறது. எட்டிப் பார்க்கையில், அந்த பெண் மருத்துவர் ஒரு பெரிய சூட்கேஸை இழுத்துச் செல்கிறார்.
அவரைப் பின்தொடர்ந்து செல்ல அந்த ஜோடி முடிவு செய்கிறது. இதற்கிடையே, காலி சூட்கேஸை தன் பிளாட்டில் கொண்டுபோய் வைக்கச் செல்கிறார் அந்த பெண் மருத்துவர். அந்த இடைவெளியில், அவரது காரில் ஒரு ட்ராக்கரை பொருத்துகிறது அந்த ஜோடி.

சில மீட்டர்கள் இடைவெளியில் அவரது காரைப் பின் தொடர்ந்து இருவரும் செல்கின்றனர். அப்போது நன்றாக மழை பெய்கிறது. கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு மேடு பள்ளமான இடத்திற்குச் சென்றபிறகு அந்த கார் எங்கு சென்றது என்று தெரியவில்லை.

அதையடுத்து, சாலையை விட்டு விலகிக் காட்டுப்பாதையில் அந்த ஜோடி பயணிக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், காரை விட்டு இறங்கி இருவரும் இரு வேறு திசைகளில் அந்தப் பெண் மருத்துவரைத் தொடர்வதென்று முடிவு செய்கின்றனர்.
முதலில் அந்த ஆண் அவர் இருக்குமிடத்தை அடைகிறார்.

அப்போது, அந்த பெண் மருத்துவர் ஒரு பெண்ணை அடித்து காரில் ஏற்றுவதைப் பார்க்கிறார். பிறகு அந்த கார் நகர்கிறது. அவரைப் பின்தொடர்ந்து ஓடுகிறார் அந்த விளாக்கர்.

ஒரு நீர்நிலை அருகே காரை நிறுத்தும் அந்த மருத்துவர், அங்கிருக்கும் பரிசலில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு செல்கிறார்.

’தன்னுடைய காதலி அவரது பிடியில் இருக்கிறார்’ என்றெண்ணும் அந்த ஆண், அந்தச் சூழலிலும் தனது சேனல் பார்வையாளர்களுக்கு நடந்ததைச் சொல்கிற உத்வேகத்துடன் அக்காட்சிகளை கேமிராவில் பதிவு செய்கிறார்.

இறுதியாக, உடைந்த படகொன்றில் அந்த பெண் மருத்துவர் இருப்பது தெரிகிறது. அங்கு சென்று பார்த்தால், அவரது காதலி இல்லை. மாறாக, இன்னொரு பெண் இருக்கிறார்.

அவர் யார் என்ற கேள்விக்குப் பதில் அறிவதற்குள், அங்கு அந்த பெண் மருத்துவர் வருகிறார். அவரை அடித்துப் போட்டுவிட்டு, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

அதன்பிறகு என்ன நடந்தது? அந்த விளாக்கரின் காதலி என்னவானார் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ஃபுட்டேஜ்’ படத்தின் இரண்டாம் பாதி.
ஒரு ஆணும் பெண்ணும் தங்களது பார்வையில் இந்த உலகத்தைப் பார்ப்பதாகக் காட்டுகிறது ‘ஃபுட்டேஜ்’ திரைக்கதை. அதனால், முதல் பாதி அந்த ஆணின் கேமிரா பார்வையிலும், பின்பாதி அந்த பெண்ணின் பார்வையிலும் காட்டப்படுகிறது.
அந்த உத்திதான் ‘ஃபுட்டேஜ்’ படத்தின் யுஎஸ்பி.

வித்தியாசமான முயற்சி!

‘ஃபுட்டேஜ்’ படம் ஒரு வித்தியாசமான பரீட்சார்த்த முயற்சி என்பதில் எந்த ஐயமும் வேண்டாம்.

வழக்கமாக, கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கதை சொல்லுதல் எனும் உத்தியில் பெரும்பாலும் ஹாரர் படங்களே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் கதாபாத்திரங்கள் காடு மேடுகளில் பயணிக்கையில், அந்த கேமிராவில் என்னென்ன பதிவாகிறதோ அதுவும் திரையில் ஓடும். அந்த கேமிரா பார்வை, வழக்கமாக நாம் காணும் திரைப்படங்களில் கண்டது போல் இருக்காது. அதுவே இது மாதிரியான ‘ஃபுட்டேஜ்’ வகையறா படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெரிய சவால்.

அந்த வகையில், ஒரு ஆண், பெண்ணின் மனநிலையையும் இதர மனிதர்களை அவர்கள் காணும் விதத்தையும் பேசுகிறது ‘ஃபுட்டேஜ்’ திரைக்கதை. மொத்தப் படமும் ‘த்ரில்லர்’ பாணியில் நகர்கிறது.

காதல் ஜோடி தான் இப்படத்தின் முதன்மை பாத்திரங்கள் என்றபோதும், அவர்கள் பின்தொடர்வதாகக் காட்டப்படும் பெண் மருத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் தான். ஆனால், இக்கதையில் அவரது கோணத்தில் அமைந்த காட்சிகள் எதுவும் கிடையாது.

அதனைத் திட்டமிட்டிருப்பதும், அதற்கேற்ப காட்சியாக்கம் செய்திருப்பதும் ‘ஃபுட்டேஜ்’ படத்தின் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஷப்னா முகம்மது உடன் இணைந்து இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் இதற்கு எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.

ஒரு ஆண், பெண்ணின் உரையாடல்களின் வழியே, அவர்களது உலகப் பார்வையை உணர்த்துகிறது திரைக்கதை.

முதல் பாதியில் தனது இணை உடன் தான் கொண்டிருக்கும் பிணைப்பை பார்வையாளர்களிடம் தெரிவிக்கும் வகையில், அந்த ஆண் தங்களுக்கு இடையேயான முன்விளையாட்டுகளைப் படம்பிடிக்கிறார். குறும்பு, அசட்டுத்தைரியம், துணிச்சலை வெளிப்படுத்துவதாக அவரது பார்வை இருக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் அப்பெண்ணின் பார்வையில் கதை விரியும்போதுதான் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள் என்பதே நமக்குத் தெரிய வருகிறது. மேலும், கோவிட் காலகட்டத்தில் மனிதர்கள் உணர்ந்த வெறுமையும் தனிமையும் திரையில் காட்டப்படுகிறது.

அவர்கள் துரத்தும் பெண் மருத்துவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை முழுமையாக அறிய அந்தப் பெண் முயற்சிப்பதைக் காட்டுகிறது. அவர்களது வீட்டின் உட்புறத்தில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், எதிர்ப்படும் மனிதர்களைக் காணும் விதம் மூலமாக, அவர்கள் இருவரது பார்வையை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்த படத்தின் இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் ஒரு படத்தொகுப்பாளர். இப்படத்திலும் கதையின் ஆன்மாவை மனதில் கொண்டு முழுப்படத்தையும் தொகுத்திருக்கிறார். அதனால், பெரும்பாலான காட்சிகள் ’ரிப்பீட்’ ஆகவில்லை. அது ஆறுதலளிக்கும் விஷயம்.

முழுக்க ‘ஆன்’ செய்யப்பட்ட கேமிராவில் எப்படி காட்சிகள் பதிவாகுமோ, அந்த வகையில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷினோஸ். இந்த ‘ஹேண்டி’ பாணி ஒளிப்பதிவு நிச்சயம் நம் பொறுமையைச் சோதிக்கக்கூடியது.

அப்புண்ணி சாஜனின் தயாரிப்பு வடிவமைப்பும் நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பும், நாமே அந்த இடங்களுக்குச் சென்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

இன்னும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்கள் திரைக்கதையின் நுட்பத்தினை நமக்கு உணர்த்த உதவுகின்றன.
இடைவேளைக்கு முன்பாக வரும் சண்டைக்காட்சி, ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ ஆக நிச்சயம் இருக்கும்.

ஒரு இயக்குனராக, மிக வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தைப் பார்வையாளர்கள் பெற வேண்டுமென்று எண்ணியிருக்கிறார் சைஜு ஸ்ரீதரன். அதற்கேற்ப படமும் அமைந்திருக்கிறது.

ஆனால், விஷாக் நாயரும் காயத்ரி அசோக்கும் தான் இப்படம் முழுக்க வருகின்றனர். அவர்களது ‘கெமிஸ்ட்ரி’தான் இதன் பலம். உண்மையிலேயே ஒரு ஜோடியின் தனிப்பட்ட வாழ்வைப் பார்ப்பது போலிருக்கிறது அவர்கள் வரும் காட்சிகள்.
இப்படத்தின் ட்ரெய்லர் அதற்கேற்ப அமைந்தாலும், பட விளம்பரங்களில் மஞ்சு வாரியாரே முதன்மைப்படுத்தப்படுகிறார்.

மஞ்சு வாரியார் பாத்திரத்திற்கு திரைக்கதையில் முக்கியத்துவம் இருக்கிறது என்றபோதும், அவரைக் காட்டும் இடங்கள் மிகக்குறைவு. அதனால், அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் இப்படத்தில் ஏமாற்றத்தையே உணரக்கூடும். அதனைத் தவிர்த்திருக்கலாம்.

உலகம் முழுக்கப் பரீட்சார்த்த முறையில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒன்றாக இடம்பெறுகிறது இந்த ‘ஃபுட்டேஜ்’. அதேநேரத்தில், அப்படிப்பட்ட படங்களில் தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இதன் உள்ளடக்கம் உள்ளது. ஒரு கமர்ஷியல் திரைப்படத்திற்கான கதைக்கரு இதில் அடங்கியிருக்கிறது.

ஆனால், அவற்றை உணர சுமார் இரண்டு மணி நேரம் பொறுமையாக தியேட்டரில் அமர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட பொறுமை கொண்டவர்கள் மட்டுமே ‘ஃபுட்டேஜ்’ பார்க்கத் தகுதியானவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 : இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீராங்கனை!

தமிழகத்திற்கான நிதியை நிறுத்தி வைப்பதா?: பாஜக அரசுக்கு அன்புமணி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share