உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்தக் குடமுழுக்கு விழாவில் அழைப்பிதழ் விநியோகம் தொடங்கி பக்தர்களுக்கான அனுமதி வரை பல்வேறு விவகாரங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகத்தில் வி.ஐ.பி. கலாச்சாரம் மற்றும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்ததும், புனித நீருக்கு பதிலாகக் குடிநீரைத் தெளித்தது எனவும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பதிவில், இந்தக் குளறுபடிகளுக்குத் தவெக அரசே முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் தனது முகநூல் பதிவில், “இன்றைய முழு கும்பாபிஷேக விழாவும், அறங்காவலர்களின் எந்தவொரு ஆலோசனையையும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய தவெக அரசின் அதிகாரிகளால் நேரடியாக நடத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும் முற்றிலும் முரணாகச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடந்த கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க போதிய அனுமதி மற்றும் வசதிகள் கிடைக்கவில்லை என பக்தர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கும் பல சமூக ஊடகப் பதிவுகள் இன்று காலை எனக்கு வந்துள்ளன. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சில குறைகள் எந்த ஆட்சியிலும் நடந்திருக்கக் கூடியதுதான். ஆனால் இன்றைய பிரச்சினைக்கு முக்கியக் காரணம், முந்தைய நிகழ்வுகளில் அனுபவமுள்ள அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளில் முன்அனுபவம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு விழாவை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதனால் இன்று பக்தர்களின் குறைபாடுகளுக்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
அதேவேளையில், இன்று கும்பாபிஷேகம் நடந்த மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தைச் சீரமைத்தது உட்பட – இந்தத் தனித்துவமான திருப்பணிகளைச் செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான மாபெரும் முயற்சிகள், 2021 முதல் 2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் திமுக ஆட்சிக் காலத்தில் 95 சதவீதப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், அனுபவம் மிக்க அறங்காவலர்களைத் திட்டமிடலில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைத்ததே இன்றைய குளறுபடிகளுக்கு முக்கியக் காரணம் என்று பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
