தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் கொடுக்காத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி விட்டு உங்கள் முன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? 2016 தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் அவர்கள் செய்யவில்லை. இந்த லட்சணத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து நாம் காப்பி அடித்துவிட்டோம் என்று வாய் கூசாமல் சொல்கிறார் பழனிசாமி.
திமுக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கட்டணமில்லா விடியல் பயணம் என பழனிசாமி தான் நமது திட்டத்தை ஒன்று விடாமல் காப்பியடித்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். 10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் அதிமுக ஆட்சியில் சாதனைகள், திட்டங்கள் என்று பட்டியல் போட அவரிடம் எதுவும் இல்லை.

செம குஷி
இந்தக் கஷ்டம் பழனிசாமியை விட அவருடைய ஓனர் பிரதமர் மோடிக்கு இன்னும் அதிகம் உள்ளது. அவராலும் தமிழ்நாட்டிற்கு செய்த சிறப்புத் திட்டம் என்று எதையும் சொல்ல முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வாழும் நமது பிரதமர் மோடி, தேர்தல் சீசன் என்பதால் இப்போது அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். வரும் 4ஆம் தேதி சென்னையில் ரோடு ஷோ செய்ய வருகிறார் என்ற செய்தி வந்தது.இதனால் யார் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ, நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். திமுகவினருக்கு இப்போது செம குஷி. ஏன் என்று கேட்கிறீர்களா? கடந்த முறை 2024 தேர்தலின் போது இப்படித்தான் சென்னையில் அவர் ரோடு ஷோ செய்தார். நாம் 40க்கு 40 என்ற முழு வெற்றியைப் பெற்றோம். இப்போதும் அடித்துச் சொல்கிறேன் – அவர் வந்தால் நம்முடைய 200 தொகுதி என்ற இலக்கை அடைவது உறுதியாகிவிடும். மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை இங்கு வருகிறார்களோ, நம்முடைய வெற்றியின் மார்ஜின் கூடிக்கொண்டே போகும்.
நம்முடைய பிரச்சாரப் பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை திடீரென்று அனுப்பிவிட்டார்கள். நான் கேட்கிறேன் – பாஜகவை தமிழ்நாடு ஏன் இந்த அளவிற்கு எதிர்த்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தெரியாதா? ஏனென்றால் தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொன்னால் அவமானப்படுத்துகிறது.
தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பாசத்தில் நம்மையே மிஞ்சக்கூடிய அளவிற்கு நடிக்கிறார்கள். இதுவே பீகார் மாநிலத்தில் தேர்தல் வந்த போது பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பீகார் மக்களைத் தொடர்ந்து துன்பப்படுத்துகிறார்கள்” என்று ஒரு பொய்யைப் பேசினார். அவர் வகிக்கக்கூடிய உயர்ந்த பதவிக்கு தகுதியான பேச்சா இது? பீகாருக்கு வாக்கு கேட்டுச் சென்றபோது நீங்கள் இதைப் பேசினீர்களே, இப்போது தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்க வரப்போகிறீர்கள். பீகாரில் பேசிய அதே வார்த்தையை தமிழ்நாட்டில் தைரியம் இருந்தால் பிரதமர் மோடி சொல்வாரா? இதைத்தான் நான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு இனம், மொழி மாநிலங்களைச் சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நிம்மதியாக இருக்கிறார்கள். இப்படி வந்தாரை வாழவைக்கும் நம்மைப் பார்த்து அபாண்டமாகப் பழி போட்டவர் பிரதமர் மோடி.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதைவிட மோசமாகப் பேசினார். நாடாளுமன்றத்திலேயே “தமிழர்கள் நாகரீகமற்றவர்கள்” என்று பேசினார். நாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பிறகுதான் பணிந்து மன்னிப்பு கேட்டார்.
ஒடிசா மாநிலத்திலும் தமிழர்களை எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தினார்கள் என்பதை மறக்க முடியுமா? நம்மை கேவலப்படுத்தி விளம்பரங்களை எல்லாம் எடுத்து வெளியிட்டார்கள். அதைவிடக் கொடுமை என்னவென்றால், “பூரி ஜெகநாதர் கோயிலில் இருக்க வேண்டிய கருவூலச் சாவியே தமிழ்நாட்டிற்குப் போய்விட்டது” என்று தமிழர்களைத் திருடர்களாகச் சித்தரித்துப் பேசினார்கள்.
குடியரசு தின அணிவகுப்பில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு இடமில்லை என்று மறுத்தார்கள். இதனால்தான் தமிழ்நாட்டில் உங்களுக்கு இடம் இல்லை என்று எங்கள் மக்கள் சொல்கிறார்கள்.
இன்னும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஷோபா, தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று பேசி, பிரச்சனையான பிறகு மன்னிப்பு கேட்டார்கள். இதுதான் பாஜகவின் உண்மையான குணம். தமிழ் மீது வெறுப்பு ஊறிப்போய் இருக்கக்கூடிய குணம் அவர்களுடையது.
கோவை மதுரை மெட்ரோ திட்டம்
கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களைக்கூட நிராகரித்திருக்கும் அரசுதான் இன்று இருக்கும் ஒன்றிய பாஜக அரசு. “20 லட்சம் மக்கள் தொகை இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். இப்போது 2026-ல் மக்கள் தொகை வெகுவாகக் கூடியுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கி அதை நிறைவேற்றி முடிக்கும் போது 2035 ஆம் ஆண்டு ஆகிவிடும். அப்போது கோவை, மதுரை மக்கள் தொகை இவர்கள் சொல்லும் 20 லட்சத்தைத் தாண்டி இருக்கும். இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா? நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கிடையாது என்று பாஜக மறுக்கிறது.
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஆக்ராவில் விட்டிருக்கிறது பாஜக. ஆக்ராவின் மக்கள் தொகை எவ்வளவு? 16 லட்சம் தான். ஆனால் அங்கு மெட்ரோவிற்கு அனுமதிக்கிறார்கள். அதேபோல் பாட்னா போன்ற நகரங்களுக்கு அனுமதி தந்திருக்கிறார்கள். ஆனால் கோவைக்கும் மதுரைக்கும் அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் காரணம் என்ன? இந்த இரண்டு நகரமும் தமிழ்நாட்டில் இருக்கும் காரணம்தான்.
பாவச் செயலா?
தமிழ்நாட்டைப் பார்த்தால் பாஜகவிற்கு எப்படித் தெரிகிறது? பாஜகவிற்கு வாக்களிக்காதது பாவச் செயலா? கோவையை கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறதே! கோவை மக்களுக்கு இப்படிப்பட்ட அநீதியை இழைத்துவிட்டு எந்த முகத்தோடு கோவைக்கு வருகிறீர்கள்? தேர்தல் நேரத்தில் மட்டும் இவர்களுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வரும். ஒன்றிய பட்ஜெட் தயாரிக்கும் போது தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிடுவார்கள். இயற்கை பேரிடர் நிவாரண நிதி தருகிறபோது தமிழ்நாடு நினைவிற்கு வராது.
இப்படியெல்லாம் நீங்கள் தமிழ்நாட்டைப் பழிவாங்கும் காரணத்தால்தான் எங்கள் மக்களும் வாக்குச் சாவடிக்குப் போகும்போது பாஜக நினைவுக்கு வராது. இனியும் நினைவுக்கு வரக்கூடாது. நீங்கள் என்னதான் திட்டம் போட்டு வளர்ச்சியைத் தடுத்தாலும், என் மக்களுக்கான திட்டங்களை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுத்துக்கொண்டே இருப்பான்” என்று தெரிவித்தார்.

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசிய முதல்வர் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
