உள்ளாட்சி வலுப்பெறட்டும், சமூக நீதியில் வேரூன்றட்டும்!

Published On:

| By நா.மணி

நா.மணி

இந்தியா சுதந்திரம் பெற்று எண்பது ஆண்டுகளை நெருங்கிவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்கென வலுவான அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் ஜனநாயகத்தின் முக்கியமான நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளைப் பார்த்தால், அவை முழுமையாக வளர்த்தெடுக்கப்படாமல் இன்னும் குழந்தையைப் போல தவழ்ந்து கொண்டு இருக்கிறது. .

உள்ளாட்சிக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்துவிட்டது. தேர்தல்கள் நடைபெறுகின்றன. பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெண்களுக்கும், பட்டியல் சமூகங்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் இருந்தபோதிலும், உள்ளாட்சி உண்மையான அதிகார மையமாக மாறிவிட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் உறுதியாக ‘ஆம்’ என்று சொல்ல முடியவில்லை.

ஜனநாயகத்தின் அடித்தளம்

ADVERTISEMENT

உள்ளாட்சிக்கு அதிகாரம் வேண்டும். நிதி வேண்டும். பணியாளர்கள் வேண்டும். நிர்வாகச் சுதந்திரம் வேண்டும். அதைவிட முக்கியமாக, உள்ளாட்சி என்பது மக்களின் ஆட்சி என்பதற்கான அரசியல் நம்பிக்கை வேண்டும். உள்ளாட்சியை வலுப்படுத்துவது என்பது ஒரு நிர்வாகச் சீர்திருத்தம் மட்டும் அல்ல. அது நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கி கட்டமைக்கும் மிகச் சிறந்த ஆட்சி முறையாக இருக்க முடியும். ஜனநாயகத்திற்கு அதைவிட வலுவான அடித்தளம் வேறு எதுவாக இருக்க முடியும்?

உள்ளூரில் ஜனநாயகம் என்ன செய்யும்?

ஒரு கிராமத்தின் குடிநீர் பிரச்சினையை அந்தக் கிராம மக்களை விட நன்றாகத் தலைநகரில் இருப்பவர் அறிந்திருக்க முடியாது. ஒரு பள்ளியின் உண்மையான நிலை என்ன, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு என்ன கிடைக்கிறது, எந்தக் குடும்பத்திற்கு வீடு தேவை, எந்தத் தெருவில் சாக்கடை தேங்குகிறது, எந்தப் பகுதியில் சாதிப் பாகுபாடு இருக்கிறது என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

அதனால்தான் மக்களின் வாழ்க்கைக்கு மிக அருகில் இருக்கும் அரசாக உள்ளாட்சி இருக்கிறது. ஆனால், அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி வலுவாகப் பேசும் அரசியல் இயக்கங்களுக்குக்கூட உள்ளாட்சி அதிகாரத்தை முழுமையாகப் பரவலாக்குவதில் தயக்கம் இருப்பது ஒரு முரண்பாடு.

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது நியாயமானதாக இருக்கலாம். ஆனால் மாநிலத்திற்குள் இருக்கும் அதிகாரம் மாவட்டத்திற்கும் நகரத்திற்கும் கிராமத்திற்கும் செல்ல வேண்டாமா?

அதிகார பரவலாக்கம் ஏன் அவசியம்?

மாநிலத்திற்கு அதிகாரம் கிடைத்த பிறகு அந்த அதிகாரம் மாநிலத் தலைநகரில் குவிந்துவிட்டால், அது முழுமையான அதிகாரப் பரவலாக்கம் அல்ல. அதிகாரம் கிராமத்தின் வாசல் வரை செல்ல வேண்டும். மக்கள் அதைத் தங்களுடையதாக உணர வேண்டும்.

இந்த இடத்தில்தான் கேரளாவின் உள்ளாட்சி அனுபவம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைத் தருகிறது. உள்ளாட்சியை வளர்ச்சித் திட்டமிடலின் ஒரு கருவியாகவும் மக்கள் பங்கேற்பின் நிறுவனமாகவும் பயன்படுத்திய முயற்சிகள் அங்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன.

அதன் முழு அனுபவத்தை அப்படியே நகலெடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு அடிப்படை உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மக்களை நம்பாமல் அடிமட்ட ஜனநாயகத்தை உருவாக்க முடியாது.

ஆளுகையின் மேசைக்கு அழைத்துச் செல்லும் அரசியல் சாசனம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சமூகநீதி அரசியலுக்கும் நீண்ட வரலாறு இருக்கிறது. இருந்தாலும், உள்ளாட்சியை சமூக மாற்றத்தின் மிகப் பெரிய கருவியாக நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.

இதில் இடஒதுக்கீட்டின் கேள்வி மிகவும் முக்கியமானது. பெண்களுக்கும், பட்டியல் சமூகங்களுக்கும், பழங்குடியினருக்கும் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சமூகப் பரிசோதனைகளில் ஒன்று.

நூற்றாண்டுகளாக அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர்களை ஆளுகையின் மேசைக்கு அழைத்து வருவதற்கான அரசியலமைப்புச் சட்ட முயற்சி இது. ஆனால் நாம் அவர்களுக்கு இருக்கையை மட்டும் கொடுத்திருக்கிறோமா? அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறோமா?

ஜனநாயகம் தரும் வாய்ப்பை ஆளுகையாக எப்படி மாற்றுவது?

பெண்களுக்காக ஒரு மேயர் பதவி ஒதுக்கப்படலாம். அந்தப் பதவிக்கு அரசியலில் முன்பு பெரிய பங்கு வகிக்காத ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் அவர் பதவியில் அமர்ந்த பிறகும் அவருடைய கணவர் அல்லது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை இருந்தால், பதவி பெண்ணிடம் இருந்தாலும் அதிகாரம் வேறு இடத்தில் இருக்கிறது. இதை வைத்து அந்தப் பெண்ணின் திறமையை கேள்விக்குள்ளாக்கக் கூடாது.

நேற்று வரை அரசியல் கூட்டங்களில் பங்கேற்காத ஒரு பெண் இன்று மேயராகவோ ஊராட்சித் தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்படலாம். அது அவருடைய குறை அல்ல. ஜனநாயகம் அவருக்கு ஒரு வாய்ப்பைத் திறந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை அதிகாரமாக மாற்றுவதற்கான பயிற்சியை சமூகமும் அரசியல் கட்சிகளும் வழங்க‌ வேண்டும்.

அவருக்கு நகராட்சி சட்டம் தெரிய வேண்டும். நிதி நிர்வாகம் தெரிய வேண்டும். கோப்புகளைப் படிக்கத் தெரிய வேண்டும். அதிகாரிகளிடம் கேள்வி கேட்க திறன் வளர்ப்பு தேவை. மக்கள் குறைகளைப் பதிவு செய்து தீர்வு காணும் முறையை அறிய வேண்டும். இவை எதுவும் இயற்கையாக வருவதில்லை.

கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதனால் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய அடுத்த கட்டத்தில், பெண்களை அதிகாரம் செலுத்தக்கூடிய தலைவர்களாக உருவாக்கும் அரசியல் கல்வி இயக்கம் தேவைப்படுகிறது. அதனை திட்டமிட்டு செய்து தரும் அமைப்புகள் இருக்க வேண்டும்.

வழிகாட்டும் சமூகப் பொறுப்பு

பல தலைமுறைகளாக தீண்டாமை, சாதி ஒடுக்குமுறை, நிலமின்மை, கல்வியின்மை, வறுமை போன்ற பல்வேறு தடைகளை எதிர்கொண்ட சமூகத்திலிருந்து ஒருவர் பஞ்சாயத்துத் தலைவராக வருகிறார்.

அரசியலமைப்பு அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதிகார அலுவலகத்தில் சென்று அதிகாரியிடம் கேள்வி கேட்பது, பஞ்சாயத்து நிதியைப் புரிந்துகொள்வது, திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது, கிராமசபையை நடத்துவது போன்றவை அவருக்குப் புதிதாக இருக்கலாம்.
அவரிடம் அனுபவமிக்க அரசியல்வாதியின் திறனை உடனடியாக எதிர்பார்ப்பது நியாயமல்ல.

அவருக்கு கற்றுக்கொடுப்பதுதான் சமூகநீதி. அவரைத் தனியாக விட்டுவிடாமல் வழிகாட்டுவதுதான் சமூகப் பொறுப்பு. அவருடைய பதவியை வேறு ஒருவர் பயன்படுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பதும் ஜனநாயகத்தின் பொறுப்பு. இன்னும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த சிலருக்கு அரசியல் என்பது ஒரு சிறிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக மட்டுமே கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒரு பதவி கிடைத்தால் போதும், ஏதாவது சிறிய பொருளாதாரப் பலன் கிடைத்தால் போதும், கட்சியில் ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலை கட்டமைக்கப்படுகிறது.

கிராம சபையை ஏன் வலுப்படுத்த வேண்டும்?

பதவி என்பது மக்களுக்குச் சேவை செய்யும் பொறுப்பு என்ற அரசியல் கல்வி கிடைக்கவில்லை. கிராமத்தின் வளர்ச்சியைத் திட்டமிடுவது எப்படி, மக்களின் பிரச்சினையை அரசின் திட்டமாக மாற்றுவது எப்படி, அதிகாரத்திடம் கணக்குக் கேட்பது எப்படி என்பதெல்லாம் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இதற்கான மிகச் சிறந்த பள்ளி கிராமசபை. கிராமசபை என்பது ஆண்டுக்கு சில நாட்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் எழுதும் நிகழ்வு அல்ல. அது ஜனநாயகத்தின் அடிப்படை அரங்கம். ஒரு கிராமசபையில் ஒரு சாதாரண குடிமகன் எழுந்து, “இந்தப் பணிக்காக எவ்வளவு பணம் செலவிட்டீர்கள்?” என்று கேட்க முடிந்தால் அது ஜனநாயகம்.

“எங்கள் தெருவுக்கு ஏன் குடிநீர் வரவில்லை?” என்று கேட்க முடிந்தால் அது ஜனநாயகம்.

“இந்தத் திட்டத்தின் பயன் ஏன் எங்கள் சமூகத்திற்கு வரவில்லை?” என்று கேட்க முடிந்தால் அது ஜனநாயகம். “எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் போதுமானவர்களா?” என்று கேட்க முடிந்தால் அது ஜனநாயகம். அதனால் கிராமசபையை வலுப்படுத்தாமல் உள்ளாட்சியை வலுப்படுத்த முடியாது.

என்ன செய்ய வேண்டும்?

பட்டியல் சமூகங்களின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரியும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. சமூக இயக்கங்கள் இருக்கின்றன. தன்னார்வ அமைப்புகள் இருக்கின்றன. கல்வியாளர்கள் இருக்கின்றனர். ஏற்கெனவே சிறப்பாகப் பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அக்கறையும் நேர்மையும் கொண்ட இளைஞர்களை அடையாளம் காண வேண்டும். அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை உள்ளாட்சித் தலைமைக்குத் தயார்படுத்த வேண்டும். தேர்தலுக்கு முன்பே உள்ளாட்சி சட்டம், கிராமசபை, பஞ்சாயத்து நிதி, அரசு திட்டங்கள், மக்கள் பங்கேற்பு, சமூகநீதி ஆகியவற்றில் அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும்.

இதற்கு ஒரு பெரிய அரசியல் கட்சி அவசியமில்லை. ஒரு பெரிய அமைப்பு அவசியமில்லை.

நல்ல உள்ளாட்சியை உருவாக்க வேண்டும் என்று நம்புகிற சில நல்ல மனிதர்கள் ஒன்றிணைந்தால் கூட சாத்தியமே.

“எங்களுக்கு உதவுவதற்கும் வழிகாட்டுவதற்கும் ஒரு குழு இருக்கிறது” என்ற நம்பிக்கை புதிய உள்ளாட்சித் தலைவருக்கு வர வேண்டும்.
அப்போது அவர் அதிகாரத்தை அஞ்சாமல் பயன்படுத்தத் தொடங்குவார்.

அதன் பிறகு உருவாகும் மாற்றம் மிகவும் ஆழமானதாக இருக்கும்.

சமூகத்தின் மனநிலையை மாற்றுதல்

ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் நேர்மையாகவும் திறமையாகவும் ஒரு பஞ்சாயத்தை நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். குடிநீர் பிரச்சினையைத் திறம்பட தீர்க்கிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். பஞ்சாயத்து கணக்குகளை வெளிப்படையாக வைக்கிறார். கிராமசபையை முறையாக நடத்துகிறார். எல்லா சமூகங்களையும் சமமாக நடத்துகிறார்.அவரைப் பார்த்து முதலில் அவரது சமூகத்தினர் நம்பிக்கை பெறுவார்கள். பிறகு மற்ற சமூகத்தினரும் அவரை மதிக்கத் தொடங்குவார்கள்.
“இவரும் நிர்வகிக்க முடியும்” என்ற எண்ணம் உருவாகும்.

அதன்பிறகு, “இவர்களால் நிர்வகிக்க முடியாது” என்ற தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்பட்ட மனநிலை மெதுவாக கரையும். இதுதான் இடஒதுக்கீட்டின் உண்மையான சமூக விளைவு.இடஒதுக்கீட்டின் நோக்கம் பதவிகளைப் பகிர்வது மட்டும் அல்ல.அதிகாரத்தை அனுபவிக்காதவர்களுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தும் அனுபவத்தை வழங்குவதும், அந்த அனுபவத்தின் மூலம் சமூக மனநிலையை மாற்றுவதும்தான் அதன் ஆழமான நோக்கம்.

புதிய உள்ளாட்சி தலைமுறையை உருவாக்குதல்

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவிக்கு வந்தவுடன் அவர் மற்றவர்களைவிட அதிகமான நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடாது. நேர்மை எல்லோருக்கும் பொதுவான அரசியல் அளவுகோலாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர் நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படும்போது, அந்த செயல்பாடு சமூக மாற்றத்திற்கு ஒரு கூடுதல் அர்த்தத்தை உருவாக்கும்.
அதனால் அடுத்த உள்ளாட்சித் தேர்தலை வெறும் கட்சி போட்டியாகப் பார்க்காமல், புதிய உள்ளாட்சித் தலைமுறையை உருவாக்கும் வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

ஒதுக்கீட்டில் போட்டியிடுபவர்களைத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தேடுவது போதாது. இன்றிலிருந்தே தேட வேண்டும். பெண்களை அடையாளம் காண வேண்டும்.

இளைஞர்களை அடையாளம் காண வேண்டும். பட்டியல் சமூகங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து சமூகப் பணியில் ஆர்வமுள்ளவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும்.

திறமையான மக்கள் தலைவர்களாக மாற்றுவது எப்படி?

வெற்றி பெற்ற பிறகு அவர்களைத் தனியாக விட்டுவிடக் கூடாது. ஒரு புதிய உள்ளாட்சி தலைவருக்கு முதல் நாளிலிருந்தே உதவி கிடைக்க வேண்டும்.
முதல் கிராமசபையை எவ்வாறு நடத்துவது? முதல் தீர்மானத்தை எவ்வாறு உருவாக்குவது? பஞ்சாயத்து அலுவலகத்தில் எந்த ஆவணங்களைப் பார்க்க வேண்டும்? வருவாய் என்ன? செலவு என்ன? அரசுத் திட்டங்கள் எவை?
மக்களின் தேவைகளை எவ்வாறு முன்னுரிமைப்படுத்துவது? எதை உடனடியாகச் செய்யலாம்? எதற்கு நீண்ட கால முயற்சி தேவை? எங்கே அதிகாரிகளுடன் பேச வேண்டும்?
எங்கே மக்களை நேரடியாக இணைக்க வேண்டும்? இவற்றைக் கற்றுக்கொடுத்தால், ஒரு சாதாரண உள்ளாட்சி பிரதிநிதி சில ஆண்டுகளில் ஒரு திறமையான மக்கள் தலைவராக மாற முடியும்.

இது சாத்தியமற்ற கனவு அல்ல. சில இடங்களில் இது ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது.
அத்தகைய அனுபவங்களைத் தேடி, அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து, ஒரு பரந்த உள்ளாட்சி ஜனநாயக இயக்கமாக மாற்ற வேண்டும்.

நல்ல நிர்வாகத்தை கண்டறிதல்

பரந்துபட்ட உள்ளாட்சி இயக்கத்தின் நோக்கம் யார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நிர்ணயிப்பது அல்ல.
யார் நல்ல உள்ளாட்சி நிர்வாகத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிவதே. அது ஒரு கட்சிக்கு மட்டும் உரிய பணியாக இருக்கக்கூடாது.
சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் பங்கேற்கக்கூடிய பணியாக இருக்க வேண்டும். ஏனெனில் உள்ளாட்சி என்பது ஒரு கட்சியின் சொத்து அல்ல.ஒரு சாதியின் சொத்து அல்ல.ஒரு குடும்பத்தின் சொத்து அல்ல.அது மக்களின் பொது சொத்து.

ஒரு பஞ்சாயத்து தலைவர் தன் பதவியை தனிப்பட்ட அதிகாரமாகப் பயன்படுத்தத் தொடங்கும்போது உள்ளாட்சி பலவீனமாகிறது. அதே தலைவர் தன் பதவியை மக்கள் பங்கேற்புக்கான கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஜனநாயகம் வலுவாகிறது.

இந்த வித்தியாசத்தை உருவாக்குவதுதான் நம் முன் இருக்கும் மிகப்பெரிய பணி.

பழைய சமூக மனநிலையை மாற்றுதல்

சமூக ஏற்றத்தாழ்வுகள் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டவை. அவற்றை ஒரே தேர்தலில் அழித்துவிட முடியாது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு சிறிய கதவைத் திறக்க முடியும். இடஒதுக்கீடு ஒரு கதவைத் திறந்திருக்கிறது. உள்ளாட்சி அந்தக் கதவுக்குள் நுழையும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.கிராமசபை அந்த வாய்ப்பை ஜனநாயக அனுபவமாக மாற்றுகிறது.


பயிற்சி அதைத் தலைமைத்துவமாக மாற்றுகிறது. நல்ல நிர்வாகம் அதை சமூக அங்கீகாரமாக மாற்றுகிறது. அந்த அங்கீகாரம் மெதுவாக சாதி அடிப்படையிலான பழைய சமூக மனநிலையை மாற்றுகிறது. இதற்குத் தேவையானது பொறுமையும் தொடர்ச்சியான பணியும்.

மாற்றம் சாத்தியமே

எல்லாவற்றையும் ஒரே நாளில் மாற்றிவிடலாம் என்ற மாய நம்பிக்கையும் வேண்டாம். எதையும் மாற்ற முடியாது என்ற நம்பிக்கையின்மையும் வேண்டாம்.
மாற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தும் அரசியல் அறிவு வேண்டும்.
இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்புகளில் ஒன்று உள்ளாட்சி.

அதை வெறும் தேர்தல் பதவியாகப் பார்க்காமல் சமூக மாற்றத்தின் பள்ளியாகப் பார்க்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு நல்ல பஞ்சாயத்து உருவாகலாம்.

அது பத்து கிராமங்களுக்கு முன்மாதிரியாகலாம்.பத்து கிராமங்கள் நூறு கிராமங்களாகலாம். அந்த நூறு கிராமங்கள் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கலாம்.
அப்போது உள்ளாட்சி உண்மையில் குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளரத் தொடங்கும். மக்களாட்சிக்கும் அப்போது ஊட்டச்சத்து கிடைக்கும்.

Photo of author
நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share