கேரள மாநிலப் பணியாரங்களில் உண்ணியப்பம் மிக முக்கியமானது. கொட்டாரக்கரை மகாகணபதி கோயிலின் முக்கிய நைவேத்தியமான உண்ணியப்பத்தை இந்த விநாயகர் சதுர்த்தியன்று செய்து நீங்களும் படைக்கலாம். அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
பச்சரிசி – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
வாழைப்பழம் – ஒன்று
நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 4
வெந்தயம் – 10
சமையல் சோடா – கால் டீஸ்பூன்
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை இரண்டு முறை கழுவிய பின் போதுமான அளவு தண்ணீர் விட்டு வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த பச்சரிசி, வெந்தயம், ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு லேசாக அரைக்கவும். அதோடு நறுக்கிய வாழைப்பழம் மற்றும் தட்டிய வெல்லம் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி, அதில் நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகள், சமையல் சோடா சேர்த்துக் கலந்து கொள்ளவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் தயார் செய்த மாவை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு சிறு சிறு பணியாரங்களாக ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். கீழ்ப்பகுதி பொன்னிறமானதும் மெதுவாகத் திருப்பிப்போட்டு நன்றாக சிவந்து வந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: சிவப்பு சம்பா பச்சரிசியிலும் செய்யலாம்.
