நீதிபதி பதவியை ஒரு ஒருபோதும் அதிகாரப் பதவியாகப் பார்க்கவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் பதவி ஏற்றார். அவரது பதவி காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதையொட்டி இன்று (நவம்பர் 21) பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “1985ல் நான் சட்ட மாணவனாக இப்பணியில் சேர்ந்தேன். இப்போது நீதித்துறை மாணவனாக ஓய்வு பெறுகிறேன். அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை
அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
நான் ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறேன். இந்த பதவியை அதிகாரப் பதவியாக நான் ஒருபோது பார்த்ததில்லை. மாறாக இந்த நாட்டுக்கும், சமூகத்துக்கும் சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன்
அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். கடைகோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தீர்ப்புகள் எளிமையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.
