முதல்வர் விஜய்யின் ’ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்வர் விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜனநாயகன். 2026 பொங்கல் விடுமுறையையொட்டி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்தது.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. இந்த விவகாரத்தில் 20க்கும் அதிகமானோரை சென்னை போலீசார் கைது செய்தனர். இதுவரை ஜனநாயகன் படத்தை இணையத்தில் 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 9ஆம் தேதி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது.
இதைத்தொடர்ந்து வரும் 23ஆம் தேதி ஜனநாயகன் படம் திரையரங்கில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பதிவில், ”நெருப்பினால் சோதிக்கப்பட்டது. காலத்தினால் செதுக்கப்பட்டது. வரலாற்றிற்காகவே உருவாக்கப்பட்டது. போராட்டம் எவ்வளவு கடினமானதோ, வெற்றியின் முழக்கமும் அவ்வளவு சத்தமானதாக இருக்கும்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளது கே.வி.என் ப்ரொடக்ஷன்.
இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் விஜய் காவல்துறை அதிகாரியாக, கையில் வாளுடன் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறார். ஜனநாயகன் பட போஸ்டரிலும் முதல்வர் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
