மோகன்லாலின் 3 ‘மாஸ் கெட்டப்கள்’.. ‘வெட்டித் தூக்கிய’ ரஜினியின் ஜெயிலர் 2 படக்குழு- வெடித்த கொந்தளிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் 3 வித்தியாசமான தோற்றங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், ஜெயிலர் படத்தின் அடுத்த பாகம் உருவானால் அதில் பணியாற்ற மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்டோபர் 15-ந் தேதி) வெளியானது. இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஷாத் ஷம்சுதீன் கூறியதாவது: என்னை நேசித்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ADVERTISEMENT

ஜெயிலர் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து எங்களது பணியின் மீது முழு நம்பிக்கையுடன் இருந்தேன். டிரெய்லரில் மோகன்லால் சாரின் காட்சி வெறும் 2 நொடிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தபோதும் அந்த நம்பிக்கை எனக்கு இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு, மோகன்லால் சாருக்காக உருவாக்கப்பட்ட 3 வித்தியாசமான தோற்றங்கள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. டிரெய்லரில் இடம்பெற்றிருந்த அந்தக் காட்சிகூட படத்திலிருந்து வெட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சினிமாவில் எனக்குள்ள அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். மோகன்லால் சார் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இப்படி வெட்டுவது தேவையற்றது.

எங்களது சூப்பர் ஸ்டாரை இப்படி குறைத்துக் காட்டியிருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவானால் அதில் நான் பணியாற்ற மாட்டேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் யாருடைய சலுகைக்காகவோ, லாபத்துக்காகவோ, நூறு கோடி வசூல் சாதனைகளுக்காகவோ, நட்சத்திர அந்தஸ்துக்காகவோ நிற்கவில்லை.

ரசிகர்களுக்காகவும், சினிமாவை நேசிப்பவர்களுக்காகவும், மோகன்லால் சாருக்காகவும் மட்டுமே நிற்கிறேன்.

எனது திரையுலகப் பயணத்தில் எப்போதும் எனக்குத் துணையாக இருந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு ஜிஷாத் ஷம்சுதீன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share