ராஜன் குறை
கொஞ்சம் கடுமையான தலைப்புதான். விஜயை நடிகர் என்று கூறுகிறேன். அவருடைய தேர்தல் பங்கேற்பை நாடகம் என்று சொல்கிறேன். அது டிராஜடியா, காமெடியா என்று வேறு கேட்கிறேன். இதெல்லாம் அவர் மீது எனக்குள்ள ஒவ்வாமையால் செய்கிறேன் என்று படிப்பவர்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. மக்களாட்சி அரசியலில் நிகழ்பவற்றை உன்னிப்பாக பரிசீலிக்கும் தத்துவார்த்த மானுடவியல் சிந்தனையாளன் என்ற முறையில் ஒரு சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவே இதனைச் செய்கிறேன்.
ஆங்கில ஊடகங்களிலும் சரி, தமிழ் ஊடகங்களிலும் சரி விஜய் குறித்த கேள்வி இப்படித்தான் முன்வைக்கப்படுகிறது: “விஜயைப் பார்க்க பெரும் கூட்டம் வருகிறது; இளைஞர்கள் குறிப்பாக அவர் திரை நட்சத்திரம் என்பதால் பெரும் ஈர்ப்புக் கொண்டுள்ளார்கள். அந்த கூட்டமும், ஈர்ப்பும் வாக்குகளாக மாறுமா? மாறினால் அவர் தேர்தலில் எத்தனை வாக்குகள் பெறுவார்? அது ஒட்டுமொத்த தேர்தல் முடிவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்?”
இந்த கேள்வியில் மிகப்பெரிய பிழை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் கூட்டம், அவரது ரசிகர்கள் கொண்டுள்ள ஈர்ப்பு ஆகியவற்றிலிருந்து அரசியல் விளைவை அணுகுகிறது. மாறாக அரசியல் என்றால் என்ன, தேர்தல் என்றால் என்ன என்ற கோணத்திலிருந்து அவருக்கு வாக்குகள் கிடைக்குமா என்று அணுகுவதில்லை. நான் அறிந்தவரையில் ஊடகங்களில் பங்கேற்கும் பல அரசியல் நோக்கர்கள், பார்வையாளர்கள், ஆங்கில, தமிழ் ஊடகங்களில் கருத்துச் சொல்லும், கட்டுரை எழுதும் யாருமே மக்களாட்சி அரசியலின் அடிப்படைகள் என்ன என்ற புரிதலிலிருந்து விஜய் தேர்தல் பங்கேற்பை அணுகுவதில்லை.

ஒரு உதாரணத்திற்கு இப்படிப் பார்ப்போம். நடிகர் அஜித் சர்வதேச கார் ரேஸ்களில் பங்கேற்கிறார். அவர் அவற்றில் வெற்றிபெறுவாரா இல்லையா என்பதை எந்த அடிப்படையில் பேசுவோம்? அவருக்குக் காரை வேகமாக ஓட்டும் திறன் உள்ளதா? அதற்கான பயிற்சி, மன உறுதி எல்லாம் உள்ளதா? பிசிகல் ஃபிட்னெஸ் இருக்கிறதா என்பன போன்ற பல நுட்பமான கேள்விகளைத்தான் கேட்போம். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ரேஸ் ஓட்டுவதைக் குறித்து பல இலட்சம் பேர் படிக்கிறார்கள் என்றேல்லாம் பேச மாட்டோம்.
இப்போது நீங்கள் உடனே ஒரு கேள்வி கேட்பீர்கள். கார் ரேஸும், அரசியலும் ஒன்றா? அரசியலில் மக்கள்தானே ஓட்டுப் போடுகிறார்கள்? அவர்கள்தானே கூட்டமாக அவரைப் பார்க்க வருகிறார்கள்? பிறகு ஏன் அந்த கூட்ட த்தை வைத்து நாம் அவர் தேர்தல் பங்கேற்பை விவாதிக்கக் கூடாது என்று கேட்பீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் மக்களாட்சி அரசியலில் கட்சி என்பதும், தலைமை என்பதும் ஒரு சில குறிப்பிட்ட பண்புகளை எதிர்பார்க்கிறது. அந்த பண்புகள் இல்லாவிட்டால் தேர்தல் பங்கேற்பு அரசியல் என்ற வகையிலேயே வராது என்றுதான் கூறுகிறேன். சும்மா ஜாலியாக ஒரு ஆர்வத்தில் நிற்கும் சுயேச்சைகள் போலத்தான்.
மக்களாட்சியில் யார் வேண்டுமானால் தேர்தலில் பங்கேற்கலாம். கட்சி தொடங்கலாம். பல பேரை அந்த கட்சியில் வேட்பாளர்களாக நிறுத்தலாம். அவர்களெல்லாம் வென்றால் நானே முதல்வராகப் பதவியேற்பேன் என்று கூறலாம். அதே போலத்தான் யார் வேண்டுமானால் ரேஸ் கார் வாங்கலாம்; சிறிது பயிற்சி செய்துவிட்டு நானும் ரேஸில் பங்கேற்கிறேன் என்று பணம் கட்டலாம். ஆனால் அந்த பங்கேற்பிற்கான சில அடிப்படை பண்புகள், திறன்கள் இருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அந்த பங்கேற்பு ஒரு நாடகம்தானே? அதில் உண்மைத்தன்மை இருக்க முடியாதே?
அதனால்தான் நாம் மக்களாட்சி என்றால் என்ன, அதில் அரசியல் கட்சி என்பதன் பங்கு என்ன, அதனை எப்படித் துவங்க வேண்டும், என்னென்ன பண்புகள் ஒரு தலைவருக்குத் தேவை என்ற அடிப்படையில்தான் விஜய் குறித்து விவாதிக்க வேண்டுமே தவிர, அவர் பிரபல திரைப்பட நட்சத்திரம், அவருக்கு பெரிய கூட்டம் வருகிறது; அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து விவாதிக்கக் கூடாது.
நம் சமூகத்தின் பெரிய பிரச்சினை என்னவென்றால் இந்த மக்களாட்சி விழுமியங்களை வலியுறுத்த வேண்டிய ஊடகங்கள், முழுக்கவும் வணிகமயமானதுடன், அரசியலை வெறும் சூதாட்டமாகவே புரிந்து வைத்துள்ளன என்பதுதான். அதனால் அவற்றால் விஜய் அரசியலுக்கே வரவில்லை, பதவி மோகத்தில் ஆட்சி செய்ய மட்டுமே விரும்புகிறார் என்ற அவலமான உண்மையை எடுத்துரைக்க முடிவதில்லை.
அரசியல்வாதிகளும் கூட்டத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவதால் அவருக்கு அரசியல் அக்கறை இருக்கிறதா என்பதைக் குறித்து கவலைப்படுவதில்லை. அவர்களுக்கும் அரசியல் என்பது வாக்கு வேட்டைதான் என்று பொருள்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி போன்ற மேட்டுக்குடி பங்கேற்பாளர்களுக்கு அடித்தட்டு மக்களின் மீது என்றைக்குமே மரியாதையோ, புரிதலோ இருக்கப் போவதில்லை. அவர்களுடன் பல்வேறு பண மூட்டைகளும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் இணைந்து “கூட்டம்-ஈர்ப்பு-பிம்ப” அரசியலை செய்தால் தவறில்லை என்று நினைக்கிறார்கள். இந்த கட்டுரை அந்த விஷச்சூழலிலிருந்து விலகி பொறுமையாக நடிகர் எப்படி அரசியலுக்கு வரலாம், என்னென்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கும் நோக்கில் எழுதப்படுகிறது.
கட்சி அல்லது இயக்கம் என்பது என்ன?
மக்கள் பல்வேறு விதங்களில் சமூகத் தொகுதிகளாக இருப்பார்கள். தொழில்கள் சார்ந்து, பண்பாட்டு அடிப்படையில், இறை நம்பிக்கை சார்ந்து, வம்சாவழி சார்ந்து என பலவகையான தொகுதிகளாக இருப்பார்கள். இந்தியாவில் இவை பலவும், உதாரணமாக தொழில், பண்பாடு போன்றவை, ஜாதி என்ற வகைப்பாட்டுடனும் தொடர்பு கொண்டிருக்கும்.
அந்தந்த மக்கள் தொகுதிகளின் நலன்களை பாதுகாக்க, அவர்களுடைய இன்னல்களைத் தீர்க்க, கோரிக்கைகளை முன்னெடுக்க கட்சிகள் அல்லது இயக்கங்கள் தோன்றும். தொழிலாளர்கள் நலன்களை முன்னெடுக்க கம்யூனிஸ்டு கட்சிகள் இயங்கும். விவசாயிகள் நலனையும் அது சில பகுதிகளில் முன்னெடுக்கும். வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கான இயக்கங்கள் தோன்றி அவை கட்சிகளாக மாறும்: லோக் தளம் போல. வன்னிய மக்களின் நலன்களை பாதுகாக்க தோன்றியது பாட்டாளி மக்கள் கட்சி. தலித் மக்கள் நலன்களை முன்னெடுக்கத் தோன்றியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இவ்வாறு குறிப்பிட்ட மக்கள் தொகுதியின் நலன்களுக்கான கட்சிகள் தவிர, அனைத்து மக்களையும் பொதுவான அடையாளத்தில் திரட்டும் வெகுஜன கட்சிகளும் தோன்றும். அவை அனைத்து மக்களின் பொதுவான எதிரியாக, முரண்பாடாக ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்டும். காலனீய ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கம், பார்ப்பனீய கருத்தியல் ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக பார்ப்பனரல்லாதோரை திராவிட-தமிழர் என்ற அடையாளத்தில் ஒன்று திரட்டியது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் முரணரசியல் எதிர்முனையாக தன்னை உருவாக்கிக் கொண்ட து அ.இஅ.தி.மு.க.
ஒரு கட்சி உருவாக வேண்டுமென்றால் அது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அல்லது ஒரு பொதுவான விடுதலைச் சொல்லாடலில் எந்த மேலாதிக்கத்திற்கு எதிராக பலரையும் ஒருங்கிணைக்கிறது என்ற தெளிவு இருக்க வேண்டும். அது கட்சி அணியனரை பிணைக்கும் சொல்லாடலாக, அந்தந்த தொகுதிகளின் நலனை சுட்டுவதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நான் பிரபலமான மனிதன்; நான் தலைவனாக இருக்க ஒரு கட்சி வேண்டும் என்று ஒரு கட்சியை உருவாக்க முடியாது. உருவாக்கினால் அது கட்சியாக இருக்காது; செயல்படாது.

நடிகர் விஜய் எதற்காக அரசியலில் ஈடுபடுகிறார்?
சிறுவனாக அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன் நடிக்கத் துவங்கியதில் இருந்து எழுபது படங்கள் வரை நடித்துள்ளவர் விஜய். குறிப்பாக 2004-இல் ‘கில்லி’ பட வெற்றிக்குப் பிறகு, முன்னணி கதாநாயக நட்சத்திரமாக அறியப்படுபவர். வணிக ரீதியிலான பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். நடனமாடுவது, உக்கிரமான சண்டைக்காட்சிகள் ஆகிய கேளிக்கை அம்சங்கள் அவருடைய வணிகரீதியான வெற்றிக்கு அடிப்படைகள். இரண்டாயிராம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த இளம் வயதினரில் கணிசமானவர்கள் அவர் ரசிகர்களாக வளர்ந்துள்ளார்கள் எனலாம்.
அவருக்கு அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் தவறில்லை. அவர் ஏற்கனவே இயங்கி வரும் கட்சிகளில் சேர்ந்து தன் அரசியல் பணியை தொடங்குவது இயல்பான முடிவாக இருந்திருக்கும். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், தலித் சமூகத்தினருக்கும் இன்றும் நிலவும் சமூக முரண்களை நீக்கும் விதத்தில் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தோ அல்லது தன் மக்கள் இயக்கத்தை அக்கட்சிக்கு ஆதரவாக சமூக நல்லிணக்க நோக்கில் கட்டமைத்தோ பணியைத் தொடங்கியிருக்கலாம். அல்லது இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து இவ்வாறான முற்போக்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கலாம். அவர் ஒருமுறை அ.இ.அ.தி.மு.க-வை ஆதரித்து தேர்தலில் நிலைபாடு எடுத்ததைக் கருதும்போது அவர் அந்தக் கட்சியிலேயே இணைந்து, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியை வலுப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அவர் நோக்கம் முதல் தேர்தலிலேயே தான் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்பதாகவே அமைந்ததுதான் பிரச்சினைக்குரியது. எவ்வளவு பிரபலமான நடிகராக இருந்தாலும் கட்சி துவங்கி நேரடியாக ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல்ஹாசன் போன்றவர்கள் முயற்சிகள் பிசுபிசுத்துப்போயின. ஜாதி அடிப்படையிலான அணி திரட்டலைக் கூட கார்த்திக், சரத்குமார் போன்றவர்களால் செய்ய முடியவில்லை.

ஓரளவு வெற்றிகரமாக அமைந்த விஜய்காந்தின் முயற்சி கூட அவரை ஆட்சி அமைக்குமளவு கொண்டு செல்ல முடியவில்லை. ஆந்திராவில் சிரஞ்சீவியின் முயற்சியும் வெற்றியடையவில்லை. காரணம் இவ்வாறான முயற்சிகள் மக்கள் பணி என்பதைவிட பதவியை நோக்கிய முயற்சிகளாகவே அமைவதால் கட்சிக்கான அணிகளை ஒருங்கிணைக்க எந்தவித அரசியல் சொல்லாடலையும் உருவாக்க முடிவதில்லை. வெறும் திரைப்பிம்பத்தை வைத்து அரசியல் சொல்லாடலை உருவாக்க முடியாது என்பது நிதர்சனம்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அவர் மூத்த சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கட்சியில் பணியாற்றி அந்த அனுபவத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் தனி கட்சி துவங்கி, தேர்தலில் படுதோல்வியை சந்தித்து, அதன்பின் கடுமையாகப் போராடி, காபு சமூகத்தினரை ஆதரவு தளமாகக் கொண்டு, பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணியில் இணைந்து 21 தொகுதிகளில் வென்று துணை முதல்வராகியுள்ளார். கூட்டணியில்லாமல் அவர் இந்த அளவு வென்றிருக்க முடியாது.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முதல்வராகவில்லையா என்று கேட்பது தவறானது. அவர்கள் கட்டிய வீட்டில் பாகம் பிரித்துக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர் தி.மு.க என்ற வீட்டில் நீண்ட நாள் குடியிருந்து, அதனை விரித்துக் கட்டி, நடுவில் சுவர் எழுப்பிப் பிரித்துக் கொண்டார். என்.டி.ஆர் ஆந்திர மாநில காங்கிரஸ் என்ற கூட்டுக் குடித்தன வளாகத்தில் ஒரு பகுதியை பிரித்துக் கொண்டார். அதற்குப் பொருத்தமான வரலாற்று சூழ்நிலை அவர்களுக்கு அமைந்தது. மக்களாட்சி முரண் இயங்கியலின் வடிவமான இரு துருவ அரசியல் உருவாவதற்கான ஒரு வெற்றிடம் தோன்றியதால் அவர்களால் அந்த இடத்தை நிரப்ப முடிந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் விஜய் அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்து அதனை வலுப்படுத்திப் பயணித்திருந்தால் பத்தாண்டுகளுக்குப் பிறகு இயல்பாகவே அதன் தலைமைப் பொறுப்பிற்கு வரும் சாத்தியம் உருவாகியிருக்கும். அதற்கான மன இயல்போ, குண இயல்போ அவரிடம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அங்கேதான் அரசியலுக்கான தலைமைப் பண்பு என்பது என்ன என்ற கேள்வி எழுகிறது. யார் வேண்டுமானாலும் அரசியல் தலைவராக முடியாது. எப்படி ரேஸ் கார் ஓட்டுவதற்கு ஒரு மன அமைப்பு வேண்டுமோ, அது போல அரசியல் தலைவர் ஆவதற்கும் ஒரு மன அமைப்பும், பண்புகளும் தேவை.
பொதுவாழ்வு என்ற பரிமாணம்
அரசியலில் ஈடுபடுவதைக் குறிக்க தமிழ் மொழியில் மிக அழகான ஒரு வார்த்தை உள்ளது. அதுதான் பொதுவாழ்க்கை. அதன் பொருள் என்னவென்றால் தன் எண்ணங்களை பொதுமன்றத்தில் வெளிப்படுத்துவது. ஆங்கிலத்தில் பப்ளிக் என்ற சொல் பொதுவானது, வெளிப்படையானது என இரண்டையும் குறிக்கும். எனவே பொதுவாழ்வின் அடிப்படை குணமே பிறருடன் பேச வேண்டும். பலரை தன் பேச்சாற்றலால் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கவேண்டும். பேச்சு என்பது அலங்காரமாக மேடையில் பேசுவது என்பதல்ல. உரையாடலாகப் பேச வேண்டும். பிறர் பேசுவதைக் கேட்க வேண்டும். முரண்பட்ட கருத்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒரு சிறிய அரசு அலுவலகத்தில் பதினைந்து பேர் கொண்ட தொழிற்சங்கக் கிளையின் தலைவராக இருப்பது அல்லது ஒரு குடியிருப்போர் நலச்சங்க தலைவராக இருப்பது கூட சவாலானது. பல பேர் அந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்குப் பொறுமை வேண்டும். பக்குவம் வேண்டும். மாற்றுக் கருத்துக்களை கேட்க வேண்டும். தன் கருத்தைப் பேசி ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். தனி வாழ்க்கையில் நம் விருப்பப்படி முடிவெடுப்பது போல செய்ய முடியாது.
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்குத் தனி வாழ்க்கை என்பதே இருக்காது அல்லது அதற்கான நேரம் மிகவும் குறைந்து போய்விடும். திருமாவளவன் போன்ற தலைவர்கள் எந்நேரமும் கட்சித் தோழர்களுடன்தான் செலவிடுவார்கள். பேசிப் பேசித்தான் தன் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும். இது ஆட்சிப் பொறுப்பை வகிக்க மிக அவசியமான பயிற்சி.

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால் அது மிகப்பெரிய சவாலாகும். அதிகாரிகளுடன், கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் தரப்புகளுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ரஜினிகாந்த் இதை உணர்ந்ததால்தான் அவர் கட்சி துவங்கி வெற்றிபெற்றாலும், முதல்வராகப் பதவியேற்க மாட்டேன் என்று கூறினார். விஜய்காந்த் நடிகர் சங்க தலைவராக இருந்து தன் தலைமைப் பண்பை நிரூபித்தவர். அவரும் கூட கட்சி அணியினரை ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதில் மிகுந்த சவாலை எதிர்கொண்டார். விஜய்காந்த் உள்ளத்திலிருந்து நிறைய பேசுவார். யாருடனும் இயல்பாகக் கலந்து பழகுவார். பொதுவாழ்க்கையில் பழக்கப்பட்டவர்.
விஜய் இன்னும் தன் தனிவாழ்க்கையிலிருந்து வெளிவரவே இல்லை. அவருடைய வளர்ப்பே தனிமைப்படுத்திய வளர்ப்புதான் என்று தோன்றுகிறது. தந்தையின் கட்டுப்பாட்டில் வெற்றியை நோக்கிய பயிற்சிகளால் நிரம்பிய தனி வாழ்வு. அதனால் தன் திரைவாழ்வு உருவாக்கிய பிம்பத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும் அரசியலுக்குப் போதும் என்று நினைக்கிறார்.

விஜய் எதையும் எழுதுவதுமில்லை; பேசுவதுமில்லை. ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட வியூக வகுப்பாளர்கள் எழுதிக் கொடுப்பதை மேடையில் படிக்கிறார். அவர் வீட்டிற்கே ஆங்கில ஊடகங்கள் போனாலும் காமிரா முன்னால் நேர்காணல் தர அஞ்சுகிறார். ஏனென்றால் அவரால் எதையுமே கோர்வையாக பேச முடியாது என்றுதான் தோன்றுகிறது. அதற்கான சிந்தனையோட்டமோ, அரசியல் அக்கறையோ அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் பல்லாயிரம் பேர் தன் பேச்சைக் கேட்கக் கூடினாலும் பத்திருபது நிமிடங்களுக்கு மேல் அவரால் பேச முடிவதில்லை. பேப்பரைப் பார்த்து படிக்கிறார். வசனமாக ஒப்பிக்கிறார்; ஆவேசமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். அதைத்தாண்டி அவர் உள்ளத்திலிருந்து எழும் குரலாக எதுவுமே ஒலிப்பதில்லை.
அவர் இதுவரை யாருடனும் பொதுவெளியில் பேசுகின்ற காட்சிகளே வெளியாகவில்லை. அந்தப்புரத்திலிருந்து அவ்வப்போது வெளிவந்து செல்லும் அரசிகளைப் போல மூடுமந்திரமாகவே அவரது ஆளுமை இருக்கிறது. அவர் உண்மையில் நாட்டு நடப்புகளை படிக்கிறாரா, சமூக இயக்கத்தை கவனிக்கிறாரா என்றே தெரியவில்லை. இவர் எப்படி முதல்வராக ஆட்சி செய்வார் என்ற கேள்வியை ஊடகங்கள் கேட்க மறுப்பது மக்களாட்சிக்குச் செய்யும் துரோகம் என்றுதான் கூற வேண்டும்.

விஜய் கட்சி துவங்கினாரா?
விஜய் கட்சி துவங்கினார் என்பதே ஒருவிதத்தில் தவறான கூற்று. அவர் அவுட்சோர்ஸிங் முறையில் புஸ்ஸி ஆனந்த் என்பவரை வைத்து தன் ரசிகர் மன்றத்தினரை கட்சி அமைப்பு போல வடிவமைத்துள்ளார். அவருக்கு கட்சிக்காரர்களுடன் எந்த நேரடித் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த ஆக்னஸ் என்பவர் கட்சி தலைமை அலுவலத்திற்கு வந்து உண்ணா நோன்பிருந்து போராடியும், விஜய் காரை வழிமறுத்தும்கூட அவருடன் விஜய் பேசவில்லை. வெறுத்துப் போன ஆக்னஸ் இன்று தி.மு.க-வில் இணைந்துவிட்டார்.
பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை நில உடைமையாளர்கள் எதிர்த்துப் போராடினார்கள். விஜய் அவர்களுக்கு ஆதரவு அளிக்கச் சென்றார். பாதி வழியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக திரும்ப வந்துவிட்டார். ஆனால் அவர் கட்சிக்காரர்கள் அங்கே சென்று ஆதரவு தெரிவிக்கலாம் அல்லவா? கட்சி என்று ஒன்று இருந்தால், அந்த கட்சியினர் பல போராட்டங்களை முன்னெடுக்கலாமே? அதற்குத்தானே பொதுச்செயலர்?
சரி, அப்படி அவர் பொறுப்பை ஒப்படைத்துள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமைப் பண்புள்ளவரா என்றால் அதுவும் இல்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த போது புஸ்ஸி ஆனந்தும் எங்கே போனார் என்றே தெரியவில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்த்தால்தான் கூட்டம் வரும். புஸ்ஸி ஆனந்த் கரூரிலேயே தங்கி, தன் கட்சிக்காரர்களுக்குப் பக்க பலமாக நின்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறி நிலைமையை கையாண்டிருக்க வேண்டும் அல்லவா? அதுதானே பொதுச்செயலருக்கு அழகு? அப்படி எதையும் ஆனந்த் செய்யவில்லை. ஓடிவிட்டார்.
விஜயின் தனிச்செயலர் என்பதற்கு மேல் பொதுச்செயலாளர் என்று அழைக்குமளவு அவர் எந்தப் பொறுப்பை வகிக்கிறார் என்றே புரியவில்லை. அவராலும் எந்த நேர்காணலும் கொடுக்க முடிவதில்லை. பொதுவெளியில் உரையாட முடிவதில்லை. விஜயின் தந்தை சந்திரசேகர் ஆனந்த் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். வேறு பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தனைக்கும் பிறகும் விஜயை பார்க்கக் கூடும் கூட்டம் புஸ்ஸி ஆனந்தை பொருட்படுத்துவதே இல்லை.

இறுதியில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று வந்தபோது யார், யாரையோ மானாவாரியாக நிறுத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பிற கட்சிகளிலிருந்து சமீபத்தில் சீட்டுக்காக இணைந்தவர்கள். ஒரு சிலரது குற்றப் பின்னணி போன்றவற்றைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் யாருடனும் விஜய் பேசியிருப்பாரா என்றுகூட தெரியவில்லை. அவ்வப்போது பிரசாரத்திற்குச் செல்லும்போது அந்தப்பகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜய் பேசுவதில்லை. அவர்களாகவே விஜய் பேரைக் கூறிக்கொண்டு விசில் அடித்துக்கொண்டு போக வேண்டியதுதான் போல.

இதற்கிடையில் அ.இ.அ.தி.மு.க-விலிருந்து சென்று தவெக-வில் இணைந்த செங்கோட்டையன் தனி ஆவர்தனமாக ஏதோ பிரசாரம் செய்து வருகிறார். ஆதவ் அர்ஜுனா அவர் போக்கில் ஏதேதோ பேசி வருகிறார். இவர்களைக் குறித்தெல்லாம் விஜய் எந்தக் கருத்தும் பொதுவெளியில் கூறுவதில்லை. அவர்களுக்கு மதிப்பும், அங்கீகாரமும் அளிக்கும் வகையில் அறிக்கை கூட வெளியிடுவதில்லை. இது எந்த விதத்தில் ஒரு கட்சியாக இயங்குகிறது என்பதே மர்மமாக இருக்கிறது.
மொத்தத்தில் விஜய் தன் திரைவாழ்வு பிம்பத்தை முதலீடு செய்து எவ்வளவு வாக்குகளை தன் பெயரில் வாங்க முடியும் என்று பரிசோதிக்கிறார். அவர் பெறும் வாக்குகளை வைத்து எதிர்காலத்தில் எப்படி அரசியல் பேரம் பேசலாம் என்று அவர் சிந்திக்கலாம். அல்லது இந்த முயற்சி போதும் என்று மீண்டும் நடிக்கப் போகலாம். இதற்கிடையில் அவரைப் பார்க்கச் சென்று, அவர் வாகனத்தின் பின்னால் சென்று உயிரிழப்பவர்களின் வாழ்க்கை டிராஜடி. விஜய் பேசும் அபத்தங்களை பகடி செய்து மகிழ்பவர்களுக்குக் காமெடி. இரண்டையும் சேர்த்தால் டிராஜிகாமெடி நாடகம். ஊடகங்களின் துரோகம் அரங்கேற்றும் மக்களாட்சியின் துயர கட்டம்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
