உலக நாடுகள் உற்று நோக்கும் ஆக்சியம்- 4 திட்டத்தின் கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு இன்று பகல் 12.01 மணிக்கு விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டது. India Shubhanshu Shukla Space
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் குழுவை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று பகல் 12.01 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா குழுவினருடன் பால்கன் 9- ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எஞ்சின் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பிவிட்டது.
தற்போது பால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்த பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும். அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர். 30 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை இந்த குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர்.