மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. myanmar earthquake death toll reach 1000+
மியான்மர் நாட்டின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில் நேற்று (மார்ச் 28) இந்திய நேரப்படி பகல் 11.50 மணியளவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் மியான்மரின் மண்டலாய் மற்றும் சகாய்ங் மாகாணங்கள் உட்பட, அண்டைநாடான தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் வானுயர மற்றும் பாரம்பரிய் பழமைவாய்ந்த கட்டிடங்கள் சரிந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போர் நெஞ்சை உலுக்கி வருகின்றன.

கடும் பாதிப்பை சந்தித்துள்ள மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.
கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் இடிபாடுகளிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் எடுக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காங்கில் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், 47 பேர் இன்னும் காணவில்லை என்றும் பாங்காக் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இரு நாடுகளிலும் மீட்புப்பணிகளை அந்நாட்டு அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.
தமிழர்களுக்காக உதவி எண்கள்! myanmar earthquake death toll reach 1000+
இந்த நிலையில் மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உதவி தேவைப்படுவோர் – 1800 309 3793, +91 80690 09901, +91 80690 09900 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.