நித்யானந்தா சீடர்களுக்கு சிக்கல்… தீவிர கண்காணிப்பில் பொலிவியா போலீஸ்!

Published On:

| By Selvam

சட்டவிரோதமாக பொலிவியா நாட்டில் குடியேறிய நித்யானந்தா சீடர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், வேறு யாரேனும் அங்கு தங்கியிருக்கிறார்களா என்று பொலிவியா நாட்டின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். police search nithyananda members

பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தா தலைமறைவாக இருந்து வருகிறார். ஈகுவடார் நாட்டில் உள்ள தீவில் நிலத்தை வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு அங்கு வசித்து வந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில், தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பழங்குடியினருக்கான நிலத்தை 1,000 ஆண்டுகளுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார் நித்யானந்தா. இதனையடுத்து பொலிவியாவிற்கு சென்ற நித்யானந்தா சீடர்கள், அங்கு ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து அறிந்த பொலிவியா அரசு நித்யானந்தா பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று அறிவித்தது. மேலும், அங்கு தங்கியிருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக பொலிவியா நாட்டின் குடிவரவு இயக்குநர் (Immigration Director) லூயிஸ் பெலிப் ஒலிவா கூறும்போது,

“நித்யானந்தா சீடர்கள் சுற்றுலாப் பயணிகளாக இங்கு அனுமதிக்கப்பட்டார்கள். சுற்றுலாவுக்காக அனுமதிக்கப்பட்ட நாட்கள் காலாவதியாகிவிட்டது

ஆனால், அவர்கள் வந்த நோக்கத்தை மீறி சட்டவிரோதமாக இங்கேயே தங்கியிருந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பொலிவியா குடிவரவு அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கட்டாயமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொலிவியாவில் வேறு யாரேனும் நித்யானந்தா சீடர்கள் தங்கியிருக்கிறார்களா என்று போலீசார் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பழங்குடி மக்களின் நிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய நித்யானந்தா சீடர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்று பொலிவிய பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொலிவிய பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் லூயிஸ் அர்தயா கூறும்போது,

“நித்யானந்தா சீடர்கள் இங்குள்ள கடைநிலை பழங்குடியின மக்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களின் அறியாமை மற்றும் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே நித்யானந்தா சீடர்கள் மீது புகார் கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். police search nithyananda members

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share