வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.
தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வென்ஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில்162 ரன்களை சேர்ந்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் (100), விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் (125) மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (104*) ஆகியோர் அடுத்தடுத்து சதமடித்தனர்.

அபாரமான இந்த பேட்டிங்கால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்கள் இழப்பிற்கு 448 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் களத்தில் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் இருக்க, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இந்திய அணி.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் தரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 மற்றும் சுந்தர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
