கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவம், மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
பெங்களூரு அருகே இட்டமேடு பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன் (34). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
கடந்த டிசம்பர் 14 அன்று அதிகாலை 3.30 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி ரூபா உடனடியாக அவரை ஸ்கூட்டரில், கத்ரிகுப்பேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கிருந்த ஊழியர்கள், இப்போது மருத்துவர்கள் பணியில் இல்லை. அதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கின்றனர்.
இதனால் அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு ஈசிஜி உள்ளிட்ட ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் வெங்கடரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவர்கள், வெங்கடரமணனை ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதேசமயம் அந்த மருத்துவமனை அவசர சிகிச்சை கூட அளிக்கவில்லை. ஆம்புலன்ஸும் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை.
மாற்று வழியின்றி, கணவரின் உயிரை காப்பாற்ற தவித்த ரூபா, வீட்டுக்கு சென்று பணம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஸ்கூட்டரில் ஜெயதேவா மருத்துவமனைக்குச் செல்ல முயற்சித்தார்.
வீட்டுக்கு செல்ல 100 அல்ல 200 மீட்டர் தொலைவு இருந்த போது வெங்கடரமணனுக்கு நெஞ்சு வலி அதிகரித்தது. இதனால் நிலைத்தடுமாறியதால் ரூபா ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டார்.
இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து வெங்கடரமணன் சாலையில் கிடந்து வலியில் துடிக்க, ரூபா அந்த வழியாக கடந்து சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டார்.
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் ஒருவரும் உதவ முன்வரவில்லை.
இதையடுத்து வெங்கடரமணனின் சகோதரிக்கு தகவல் தெரிவித்தார் ரூபா. உடனடியாக அவரும் சம்பவம் இடத்துக்கு வந்து சிபிஆர் செய்துள்ளார்.
இப்படி 7 நிமிடங்களுக்கு மேல் வெங்கடரமணன் சாலையில் துடி துடித்த நிலையில்,கடைசியாக, ஒரு கார் ஓட்டுநர் உதவியுடன் வெங்கடரமணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சாலையில் கணவரின் உயிரை காப்பாற்ற ரூபா போராடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இத்தகைய துயரமான சூழலிலும் ரூபா, தனது கணவரின் கண்களை தானம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் அவசரகால மருத்துவ உதவி கிடைப்பதில் உள்ள குறைபாடுகளையும், சமூகம் கடந்து வரும் மனிதாபிமானமற்ற போக்கையும் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
