மொறுமொறு சுரைக்காய் பக்கோடா (Bottle Gourd Pakoda) செய்வது எப்படி என்பது குறித்த செய்முறையைப் பார்க்கலாம்.
நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இதில் அதிகளவு நீர்சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பி இருப்பதால் அதிகமான நன்மைகளை நமக்கு தருகிறது. குறிப்பாக குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடையை (body weight Loss) குறைக்க உதவுகிறது, செரிமானப் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவைச் சீராக்க உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலைக் குளிர்ச்சியாக வைக்கிறது. ஆனால், வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி சுரைக்காய் சாம்பார் வைப்பதை விரும்ப மாட்டார்கள். ஆகவே, சுரைக்காய் சாம்பார் வைப்பதற்கு பதிலாக சுரைக்காய் பக்கோடாவாக செய்து அவர்களுக்கு பரிமாறலாம். பள்ளிகள் தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் பசியோடு வரும் மாலை வேளையில் சுவையான சுரைக்காய் பக்கோடாவை பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
- சுரைக்காய் – 1 (bottle gourd)
- கடலை மாவு, அரிசி மாவு – தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது
- பச்சை மிளகாய் : 1 – 3 வரை
- மஞ்சள் தூள், மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- சீரகம், சோம்பு – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
சுரைக்காய் பக்கோடா எப்படி செய்வது?
சுரைக்காயை நன்றாக சீவிவிட்டு அதனை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். அதை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதிலுள்ள அதிகப்படியான தண்ணீரை நன்றாக வடிகட்ட வேண்டும். தண்ணீர் அதிகமாக இருந்தால் பக்கோடா (bottle gourd pakoda Recipe) மொறுமொறுப்பாக இருக்காது. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். மாவு கெட்டியாகும் வரை சிறிது தண்ணீர் சேர்க்க வேண்டும். நாம் சேர்த்த மாவுக்கலவையில் சுரைக்காயை நன்றாக முக்கி எடுக்க வேண்டும்.
இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய்யை மிதமான தீயிட்டு சூடாக்க வேண்டும். சூடானதும் சிறிய பக்கோடாக்களைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும். இப்போது சுரைக்காய் பக்கோடா தயார். பக்கோடாக்களில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க, அவற்றை ஒரு பேப்பரில் வைக்கவும். வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் பக்கோடாக்களை, சட்னி அல்லது தக்காளி சாஸுடன் (tomato sauce) சூடாகப் பரிமாறலாம். மிகவும் எளிதாக சுரைக்காய் பக்கோடாவை செய்துவிடலாம். சுரைக்காய் பிடிக்காதவர்கள் கூட பக்கோடாவை மீண்டும் மீண்டும் கேட்பார்கள். உங்கள் மாலை தேநீர் நேரத்தை இன்னும் சிறப்பாக்க சுரைக்காய் பக்கோடாவை முயற்சி செய்து பாருங்கள்.
