ADVERTISEMENT

அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாமியக் குடியரசை எவ்வாறு வலுப்படுத்துகின்றன?

Published On:

| By Minnambalam Desk

ஹொசைன் டப்பாக்

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர், பொதுவாக நீண்டகாலத் திட்டத்தின் (மூலோபாயத்தின்) மொழியில் விவரிக்கப்படுகிறது. அச்சமூட்டித் தடுத்து நிறுத்துதல், பதற்றத்தை அதிகரித்தல், இராணுவ ரீதியாக நிர்பந்தப்படுத்துதல், ஏவுகணைத் திறன், அணு அபாயம் என்பனவே அந்த மொழி. இவை அனைத்தும் முக்கியமானவை, ஆனால் முழுமையான கதையைச் சொல்பவையல்ல.

ஈரான் இந்தப் போரில் எவ்வாறு போராடித் தப்பிப்பிழைக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள, நாம் இராணுவக் கணக்கீடுகளுக்கு அப்பால், அதிகாரம், இழப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக, தாக்குதலைத் தாங்கி நிற்கும் சகிப்புத் தன்மை ஆகியவற்றை அந்த அரசு எந்த தார்மீக உலகின் ஊடாகப் புரிந்துகொள்கிறதோ அந்த தார்மீக உலகைப் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

ஈரான் வெறுமனே தாக்குதலுக்கு உள்ளான அரசு மட்டுமல்ல; மத நம்பிக்கைக்காக உயிர் நீத்தல், தியாகம், புனித எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஷியா அரசியல் இறையியலால் (political theology) நீண்டகாலமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருத்தியலைக் கொண்ட அரசும் ஆகும். அதன் கருத்தியல் மையம் நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது; ஏனெனில் போர்கள் ஆயுதங்களால் மட்டுமல்ல, நிகழ்வுகளைப் பற்றிய சொல்லாடல்கள், விழுமியங்கள் ஆகியவற்றைக் கொண்டும் நடத்தப்படுகின்றன; இவற்றின் அர்த்தமும்கூட ஓர் அரசியல் ஆதார வளமாக ஆகிவிடும்.

ரமலான் மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் (ஈரானின்) உச்சநிலைத் தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, குண்டுவீச்சுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தபோதிலும், சமரசமற்ற உறுதியான போராளிகள் அரசு ஆதரவுடன் இரவு இரவாக துக்கத்தைக் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளை நடத்தி வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இஸ்லாமியக் குடியரசின் விசுவாசிகளிடையே, குறிப்பாக பசிஜ் (Basij)என்ற துணை இராணுவப் படைக்குள்ளே, தெய்வீக வழிகாட்டுதல் பெற்ற மதகுருவின் ஆட்சி என்று அவர்கள் கருதுகின்ற ஒன்றுக்காக தியாகிகளாக உயிர் நீக்கத் தயாராக உள்ள மனிதர்கள் இருக்கின்றனர். இதன் பொருள் இஸ்லாமியக் குடியரசு அசைக்க முடியாதது என்பதல்ல. இது மிகவும் சிக்கலான மற்றும் கவலைக்குரிய ஒன்றைக் குறிக்கிறது.

அதன் எதிரிகள் எதிர்பார்ப்பது போல, வெளியிலிருந்து வரும் வன்முறை அதை பலவீனப்படுத்தாமல் போகலாம். மாறாக, இஸ்லாமியக் குடியரசு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அடக்குமுறையை நியாயப்படுத்தும் அதேவேளை, பல தசாப்தங்களாக எந்தக் குறியீடுகளையும் தார்மீக அளவுகோல்களையும் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோ அந்த செயல்பாட்டை மீண்டும் இயங்க வைக்கக் கூடும்.

ADVERTISEMENT

நீதி… ஆதிக்கம்… ஆக்கிரமிப்பு!

[இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் வெறும் அதிகாரிவர்க்க அரசாக மட்டுமே இருந்ததில்லை. அது தொடக்கத்திலிருந்தே இறையாண்மையைப் புனித வரலாற்றோடு இணைக்கும் ஒரு தார்மீகத் திட்டமாகத் தன்னைப் பிறருக்குக் காட்டி வந்தது. அந்த வரலாற்றின் மையமான ,உணர்ச்சிவயப்படுத்துகிற, குறியீட்டு ரீதியான களஞ்சியம் ஷியாக்களின் நினைவில், குறிப்பாக கி.பி. 680-ல் நடந்த கர்பலா போர் பற்றிய அடங்கியுள்ளது. அப்போரில், உமாய்யத் இராணுவம் முகமது நபியின் பேரன் ஹுசெனையும் அவருடன் சென்ற சிறு குழுவையும் படுகொலை செய்தது.]

முகமது நபி மறைந்த பிறகு நிறுவப்பட்ட இரண்டாவது உமய்யாத் பேரரசின் இராணுவத்திற்கும் முகமது நபியின் பேரன் ஹுசென் இபின் அலியின் சிறு படைக்குமிடையே நடந்த சண்டையில் ஹுசென் அலியும் அவரது படைவீரர்களும் கொல்லப்பட்டனர். அந்த சண்டைக்குக் காரணம், ஹுசென் அலி, உமய்யாத் பேரரசுக்குத் தலைவணங்க மறுத்ததுதான். ஷியா பிரிவு இஸ்லாமியர்களைப் பொருத்தவரை அலி அனுபவித்த துன்பங்களும் அவரது மரணமும் தவறானதற்கு எதிராக சரியானதும், அநீதிக்கு எதிராக நீதியும் நடத்திய போராட்டத்தில் அவர் செய்த தியாகத்தின் குறியீடுகளாகப் போற்றப்படுகின்றன.

ஷியா மரபில், இந்த வரலாற்று நிகழ்வு அநீதியான அதிகாரம், அப்பாவி மக்களின் துன்பம், நீதியான எதிர்ப்பு, மீட்பளிக்கும் தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. ஒடுக்குமுறை என்பது தோல்வியைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், துன்பம் என்பது சத்தியத்தின் பக்கம் நிற்பதைக் குறிக்கலாம் என்றும், மரணம் என்பது ஒரு சாட்சியத்தின் வடிவமாக மாறக்கூடும் என்றும் அந்த வரலாற்று நிகழ்வு நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுகிறது.

இதனால்தான், இஸ்லாமியக் குடியரசின் சுய புரிதலைப் பொருத்தவரை தியாகம் என்பது ஒரு இரண்டாம்பட்சப் பாடுபொருளாக இல்லாமல், அதன் முக்கியமான ஒழுங்கமைக்கும் விழுமியங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல ஆண்டுகளாக ஈரானின் ஆட்சி அமைப்பு, தன்னை பாதிக்கப்பட்ட நீதியான அமைப்பாகவும், எஸ்தெக்பாரின் (ஏகாதிபத்தியத்தின்) ஆதிக்கம், தனக்கு இழைக்கப்பட்ட அவமானம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு புனிதப் போராட்டத்தின் பாதுகாவலனாகவும் காட்டிக்கொள்வதன் மூலம் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

தியாகத்தைப் புனிதப்படுத்துவதன் மீது ஓரளவு கட்டமைக்கப்பட்ட அரசியல்-இறையியல் ஒழுங்கமைப்பு (ஈரான்), தாக்குதலைத் தனது சொந்த தார்மீக உலகிற்குள் உள்வாங்கிக்கொள்ளும் திறன் கொண்டதாகும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பேரழிவாகத் தோன்றுவதை, சாட்சியம், சகிப்புத்தன்மை, விசுவாசம் என உள்ளிருந்து எடுத்துரைக்க முடியும்; இதில் மரணமுமே அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக மாறுகிறது.

இது வெறும் ஊகமல்ல. தற்போதைய போரில் ஈரானின் மூலோபாயம், வலிமிகுந்த சூழ்நிலையை நீண்ட காலம் தொடர்ந்து தாங்கிப்பிடிக்கும் சகிப்புத்தன்மை, ஒரு கால அளவில் தொடர்ந்து எதிரியைத் தாக்குவதன் மூலம் அல்லது அதற்குச் சிக்கல்கள் ஏற்படுத்துவதன் மூலம் அதனைப் பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே மாறிவருகிறது.

சகிப்புத்தன்மையும் தியாகமும்

அதாவது, தனது எதிரிகளைவிட நீண்ட காலம் நிலைத்திருப்பது, தாக்குதல்களைத் தாங்கிப் பிழைப்பது, எரிசக்திப் போக்குவரத்தைத் தடை செய்வது, ஈரானின் அரசியல் உறுதிப்பாடு உடைவதற்கு முன்பே வாஷிங்டன் மற்றும் நட்பு நாடுகளின் தலைநகரங்களில் உள்ள அரசியல் உறுதிப்பாடு உடைந்துவிடும் என்று பந்தயம் கட்டுவது ஆகியவை.

பெரும் இழப்புகள் ஏற்பட்டபோதிலும், குண்டுவீச்சின் காரணமாக உள்நாட்டிலுள்ள ஆட்சி அதிகார அமைப்பு தகர்க்கப்பட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

ஈரானியர்களுக்கு ஏற்பட்ட மனித இழப்புகள் மிக அதிகமாக இருந்தபோதிலும், 8 ஆண்டுக்கால ஈரான்-ஈராக் போரின் நினைவுகள், நீடித்த வெளிப்புற நிர்பந்தங்களைத் தாங்கி நிற்கும் அனுபவத்துடன், இஸ்லாமியக் குடியரசுக்கு சகிப்புத்தன்மையும் தியாக உணர்வும் கொண்ட ஒரு நீடித்த கலாச்சாரத்தையும் விட்டுச் சென்றுள்ளன.

நிச்சயமாக, எல்லா ஒருமைப்பாடுகளும் இறையியல் சார்ந்தவை அல்ல. இஸ்லாமியக் குடியரசை வெறுக்கும் பல ஈரானியர்கள், குடியரசின் மீதான விசுவாசத்தால் அல்ல, மாறாக வெளிநாட்டுத் தாக்குதலால் தூண்டிவிடப்படும் தேசிய உணர்வு அல்லது கூட்டுத் தண்டனையின் விளைவாக ஏற்படும் அச்சம், துக்கம், பயங்கரம் ஆகியவற்றின் காரணமாக (இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து) மேலும் பின்வாங்கக்கூடும்.

ஆயினும், இதுதான் இங்கு முக்கிய விஷயம். நாட்டுக்கு வெளியே இருந்து வரும் வன்முறை நாட்டிற்குள் தார்மீக வேறுபாடுகளை மங்கச் செய்யக்கூடும். அது பொதுவெளியைக் குறுகலாக்கி, நாடு வெளிநாட்டு எதிரிகளால் முற்றுகையிடப்பட்டதால் ஏற்படும் மனப்பான்மையைத் தீவிரப்படுத்தி, தான் அடக்குமுறையின் சூத்திரதாரி அல்ல, மாறாக தேசத்தின் பாதுகாவலன் என்று அரசு தன்னை முன்னிறுத்த அனுமதிக்கிறது.

இஸ்லாமியக் குடியரசின் இறையியல்

உள்நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த கோபம் வெளிநாட்டு அச்சுறுத்தலின் காரணமாக அகற்றப்படுவதால், இஸ்லாமியக் குடியரசு பல சமயம் பயனடைந்துள்ளது. அமைதிக் காலத்தில், அது அடைந்த தோல்விகள் – ஊழல், அடக்குமுறை, பொருளாதார வீழ்ச்சி, பலவந்த ஆட்சி ஆகியன – அம்பலப்படுத்தப்படுகின்றன.

போர்க்காலத்தில், குறிப்பாக வெளிநாட்டு, சட்டவிரோதத் தாக்குதலின் கீழ், அது தனது பழைய பிம்பத்தை – திறமையற்ற எதேச்சாதிகார அரசு அல்ல, மாறாக வெளிநாட்டுத் தாக்குதலை எதிர்த்துப் போரில் ஈடுபட்டுள்ள பாதுகாவலன் என்ற பிம்பத்தை- மீட்டெடுக்க முடியும். இதன் பொருள் இஸ்லாமியக் குடியரசின் இறையியல் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதல்ல; . ஈரானின் அடுத்த தலைமை, சிதைந்து வரும் விசுவாச ஆதரவுத் தளத்தையும் அதன் சட்டபூர்வத்தன்மை குறித்த தீவிரமான நீண்டகாலக் கேள்விகளையும் எதிர்கொள்கிறது என்று செய்திகள் கூறுகின்றன.

பல ஈரானியர்கள் அரசின் புனிதமான சொல்லாடாலை நம்புவதை நீண்ட காலமாகவே நிறுத்திவிட்டனர். ஆனால், அரசியல் இறையியல் செயல்படுவதற்கு உலகளாவிய தன்மை தேவையில்லை. துன்பத்தை ஒருமைப்பாடாக மாற்ற, போதுமான அளவு நம்பிக்கையாளர்கள், போதுமான அளவு நிறுவனங்கள், போதுமான அளவு சடங்குகள், போதுமான அளவு அச்சம், போதுமான அளவு போர் ஆகியவை மட்டுமே தேவைப்படுகின்றன.

இதுதான் தற்போதைய போரை தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. தமது பெரும் படைபலம் இஸ்லாமியக் குடியரசின் அர்த்தத்தையே சிதைத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கற்பனை செய்திருந்தால், அதற்குக் காரணம் அவை எதிர்த்துப் போராடுகின்ற அரசியல்-இறையியல் ஒழுங்கமைப்பு எத்தகையது என்பதை அவை தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்பதுதான்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சொல்லாடல்கள் பயனளிக்கவில்லை. ஈரான் “நிபந்தனையேதுமின்றி சரணடைய வேண்டும்” என்று அவர் எழுப்பும் கோரிக்கை, வரையறுக்கப்பட்ட மூலோபாய (நீண்டகால) குறிக்கோள்களுக்கு அப்பால் போரைக் கொண்டு சென்றதுடன் அவரை அவமானம், முழுமையான தோல்வி ஆகியவற்றை நோக்கித் தள்ளுகிறது. இது பதற்றத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமியக் குடியரசுக்கு அதனால் விவரிக்கப்படக் கூடிய சரியான வெளிநாட்டு எதிரியையும் வழங்குகிறது.

ஒரு மதச்சார்பற்ற மூலோபாயச் சிந்தனையின்படி, செயலாற்றலை அழிப்பதன் மூலம் வன்முறை பலவீனமடைகிறது. ஆனால் ஓர் அரசியல்-இறையியல் சிந்தனையின்படி, புனிதமான நோக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் வன்முறை வலுப்பெறுகிறது. புனிதமான எதிர்ப்பு என்ற கண்ணாடி வில்லையின் (lens) மூலம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும் ஒரு கருத்தியல் அரசு தளபதிகள், உள்கட்டமைப்பு நிலப்பரப்பு ஆகியவற்றை இழக்க நேரிடலாம்;

எனினும் குறியீட்டு ரீதியாக உயிர்த்துடிப்புள்ள ஒன்றைப் பெறுகிறது. நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தல் என்ற சொல்லாடலை புதுப்பிக்கப்பட்ட முறையில் பெறும் வாய்ப்புதான் அது. இது கருத்தியல் அரசுகளுக்கு எதிராக நடத்தப்படும் போரிலிருந்து விளையும் துயரங்களில் ஒன்றாகும். ஒருவர் அவர்களை (கருத்தியல் அரசைச் சார்ந்தவர்களை) வெளியிலிருந்து எவ்வளவு அதிகமாகத் தாக்குகிறாரோ, அந்த அளவிற்கு அவர்களால் உள்ளிருந்து தங்களைத் தாங்கி நிற்கும் கட்டுக்கதைகளை மீட்டெடுப்பதை எளிதாக்கிவிட முடியும்.

இவை எதுவும் இஸ்லாமியக் குடியரசின் கொடூரத்தை மறுப்பதற்கோ அல்லது அதன் தியாக இறையியலை கற்பனை நவிற்சிக்கு உள்படுத்துவதற்கோ சொல்லப்படுவது அல்ல. அந்த இறையியல் பெரும்பாலும் சுயநல நோக்கில் பயன்படுத்தப்பட்டு, மக்களை மரணிக்கச் செய்யும் அதேவேளை நம்பிக்கையின் பெயரால் இழப்பைப் புனிதப்படுத்துகிறது.

ஆனால் தார்மீக விமர்சனத்திற்குத் தெளிவு தேவைப்படுகிறது. இஸ்லாமியக் குடியரசு எவ்வாறு தப்பிப் பிழைக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், அதற்குள்ள மீண்டெழும் தன்மை இராணுவம் அல்லது நிறுவனம் சார்ந்தது மட்டுமல்ல, குறியீடு சார்ந்ததுமாகும் என்பதை நாம் காண வேண்டும். அது, காயத்தை தார்மீக அதிகாரமாக மாற்றும் அந்த அரசின் திறனில் அடங்கியுள்ளது.

அதனால்தான் (ஈரானிய அரசின்) மதப் பரிமாணம் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்குக் காரணம், இந்தப் போர் வெறுமனே மதம் சார்ந்தது என்பது அல்ல; மாறாக துன்பத்தை அரசியல் அர்த்தமாக மாற்ற மதம் உதவுகிறது என்பதுதான். இஸ்லாமியக் குடியரசால் திருப்பித்தாக்க முடிந்தால் அந்த அரசு வலுவானதாகக் கருதப்படுகிறது. (மறுபுறம், எதிரியின்) தாக்குதலைத் தாங்குவதே ஒரு வகையான வெற்றிதான் என்று போதுமான எண்ணிக்கையிலான மக்களை நம்பவைக்க முடிந்தால் அதே அளவிற்கு அக்குடியரசு வலுவானதாகக் கருதப்படுகிறது.

ஈரான் மீதான போர் ஒரு வியக்கத்தக்க முரண்பாட்டை உருவாக்கக்கூடும். அதாவது அந்தப் போர் அரசின் பொருளாயத அடித்தளங்களை பலவீனப்படுத்தக்கூடும்; அதேவேளை அந்த அரசு தொடர்ந்து வாழ்வதற்குக் காரணமாக உள்ள புனிதக் கதைக்கு ஊட்டமளிக்கவும்கூடும்.

கட்டுரையாளர்: ஹொசைன் டப்பாக், லண்டன் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத் தத்துவவியல் உதவிப் பேராசிரியர்.

நன்றி: அல் ஜஸீரா இணையதளம்: 28 மார்ச் 2026

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

மொழி பெயர்ப்பாளர் குறிப்பு: ஈரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேல் நட்த்தி வரும் போர் பற்றிய கட்டுரைகள் பல்வேறு கோணங்களிலிருந்து எழுதப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் 28 மார்ச் 2026 அன்று அல் ஜஸீரா இணையதளத்தில் வெளியான இக்கட்டுரை. இதிலுள்ள கருத்துகள் முழுவதும் எனக்கு ஏற்புடையவை அல்ல. மூலக்கட்டுரையிலுள்ள சில கூற்றுகளை எளிதில் புரிந்துகொள்ள உதவும் நோக்கத்தில் தமிழாக்கத்தில் அடைப்புக் குறிகளில் உள்ள சொற்களும் அடிக்குறிப்பும் என்னால் எழுதப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share