ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், மோமோஸ், ஸ்பிரிங் ரோல் என இந்தோ-சைனீஸ் உணவுகளுக்கு செஸ்வான் சட்னி இருந்தால் சுவையே வேற லெவல்தான். கடைகளில் கிடைக்கும் சாஸ்களுக்கு பதிலாக, வீட்டிலேயே காரசாரமான செஸ்வான் சட்னியை எளிதாக தயாரிக்கலாம்.
என்னென்ன பொருட்கள் தேவை?
- காஷ்மீரி காய்ந்த மிளகாய் – 15
- சாதாரண காய்ந்த மிளகாய் – 10
- பூண்டு – அரை கப்
- இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன்
- சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் – அரை டீ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மிளகாயை இப்படித்தான் தயார் செய்யணும்
முதலில் இரண்டு வகையான காய்ந்த மிளகாயின் காம்புகளை நீக்கி, கொதிக்கும் சுடுநீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். மிளகாய் நன்றாக மென்மையானதும் தண்ணீரை வடிகட்டி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும்.
மிகவும் மையமாக இல்லாமல், லேசான கொரகொரப்புடன் அரைத்தால் சட்னியின் பதம் நன்றாக இருக்கும்.
பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்குங்கள்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும். பூண்டு லேசாக பொன்னிறமானதும் அரைத்த மிளகாய் விழுதை சேர்க்கவும்.
மிளகாயின் பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை 8 முதல் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
கடைசியில் இந்த பொருட்களை சேர்த்தால் சுவை கூடும்!
இப்போது சோயா சாஸ், வினிகர், மிளகுத்தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் செஸ்வான் சட்னி தயார்.
முழுமையாக ஆறியதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஃப்ரைடு ரைஸ் முதல் மோமோஸ் வரை பல உணவுகளுக்கு இதை தொட்டுக்கொள்ளலாம்.
