இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியின் (HDFC) புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அனுப் பாக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
எச்டிஎப்சி வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சஷிதர் ஜகதீஷனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மீண்டும் இந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை என்று அவர் ஏற்கெனவே வங்கியின் நிர்வாக குழுவிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் பணிகளை எச்டிஎப்சி வங்கி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் அனுப் பாக்சியை புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து எச்டிஎப்சி வங்கியின் நிர்வாக குழுவும் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்த நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
அனுப் பாக்சி அக்டோபர் 27-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். அவருக்கு மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2029 அக்டோபர் 26 வரை அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.
இந்த நியமனத்தில் முக்கியமான விஷயம், எச்டிஎப்சி வங்கி தனது தலைமை செயல் அதிகாரி பதவிக்கு முதல் முறையாக வங்கிக்கு வெளியே இருந்து ஒருவரை தேர்வு செய்திருப்பதுதான்.
அதாவது, எச்டிஎப்சி வங்கியில் ஏற்கெனவே பணியாற்றி வரும் அதிகாரிகளில் ஒருவரை தலைமை பொறுப்புக்கு உயர்த்தாமல், வேறு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனுப் பாக்சி நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமை செயல் அதிகாரி சஷிதர் ஜகதீஷன் எச்டிஎப்சி வங்கியில் நீண்ட காலம் பணியாற்றி தலைமை பொறுப்புக்கு உயர்ந்தவர். இந்த பின்னணியில் அனுப் பாக்சியின் நியமனம் எச்டிஎப்சி வங்கியின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

யார் இந்த அனுப் பாக்சி?
அனுப் பாக்சிக்கு வங்கி மற்றும் நிதித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உள்ளது. 1992-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ குழுமத்தில் தனது பணியை தொடங்கிய அவர், வங்கி சேவை, மூலதன சந்தை, முதலீட்டு வங்கி, சில்லறை வங்கி, மொத்த வங்கி மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2017 முதல் 2023 வரை ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
அப்போது சில்லறை வங்கி, வணிக மற்றும் கிராமப்புற வங்கி உள்ளிட்ட பிரிவுகளை கவனித்த அவர், பின்னர் மொத்த வங்கி பிரிவையும் நிர்வகித்தார்.
2023 ஜூன் முதல் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டமும், ஐஐஎம் பெங்களூருவில் மேலாண்மை பட்டமும் பெற்றுள்ள அனுப் பாக்சி, அக்டோபர் 27-ஆம் தேதி எச்டிஎப்சி வங்கியின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
