அடுத்த அட்சய திரிதியைக்குள்…. தாறுமாறாக ஏறப் போகும் தங்கம்!

Published On:

| By Aara

தங்கம் விலை இன்று (மே 10) அட்சய திரிதியை தினத்தை ஒட்டி ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்திருக்கிறது.

இன்று அதிகாலையிலேயே கிராமுக்கு 45 ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்து, 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்றது.

ADVERTISEMENT

அதிகாலையிலேயே தங்கம் வாங்குவதற்காக மக்கள் ஜூவல்லரிகளை நோக்கி படையெடுத்த நிலையில்… அடுத்த சில மணித் துளிகளிலேயே ஒரு சவரனுக்கு மேலும் 360 ரூபாய் உயர்ந்து, 53,640 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இதுவும் போதாதன்று அட்சய திரிதியை பிற்பகலில் 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54 ,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

இன்று தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பேசிய கமாடிட்டி & கரன்சி நிறுவனத்தின் தலைவர் அனுஜ் குப்தா, “தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகள், உள்நாட்டுக் காரணிகள் என இரு வகை காரணிகள் இருக்கின்றன.

ADVERTISEMENT

சர்வதேச ரீதியாக பார்த்தால்… இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததாலும், அமெரிக்க டாலர் விலை அழுத்தத்தில் உள்ளதாலும் தங்கம் விலை இன்று உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் தங்கம் விலைக்கு இன்னொரு முதன்மையான முக்கியமான காரணி இங்கே இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் சேரும் என்ற நம்பிக்கை, பெரும் வர்த்தகமாக மாறி இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை மூன்று முறை உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது” என்கிறார்.

தங்கத்தில் முதலீடு செய்வதில் மக்களிடம் இருக்கும் ஆர்வத்தை வைத்துப் பார்த்தால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் தங்க மார்க்கெட் நிலவரம் அறிந்தவர்கள்.

2019 அட்சய திரிதியை அன்று 10 கிராம் தங்கம் ( ஒரு அவுன்ஸ்) ரூ 31,729 ஆக இருந்தது.. அதாவது ஒரு கிராம் தங்கம் 3,170 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த 2024 அட்சய திருதியைக்கு ஒரு கிராம் தங்கம் 6,770 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு பவுன் இன்றைக்கு 54,160 ரூபாய்க்கு விற்கிறது.

2023 டிசம்பர் முதல் வாரத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதாவது ஒரு கிராம் 5 ஆயிரத்து 750 ரூபாயாக இருந்தது. ஆறு மாதத்துக்குள் ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.

இதே திசையில் சென்றால் அதாவது 2025 அட்சய திரிதியை அன்று தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் 80 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார் மார்க்கெட் டிரேடிங் நிபுணரான அனுஜ் குப்தா.

அவரது கணக்குப்படி பார்த்தால் அடுத்த அட்சய திரிதியை அன்று ஒரு கிராம் 8 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயரும். அதாவது ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரம் ரூபாயாக விற்கப்படும்.

கடந்த 2023-24 இல் தங்கம் விலை உயர்ந்த விகிதத்தை விட 2024-25 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு விகிதம் வேகமாக இருக்கும் என்பதுதான் தங்க மார்க்கெட் நிலவரமாக இருக்கிறது.

மார்க்கெட்டிங் ஆய்வாளர் மோதிலால் ஓஸ்வால் இதுகுறித்து தி மிண்ட் தளத்திடம் பேசுகையில்,

“தங்கம் விலை ஏற்ற இறக்கத்துக்கு புவி-அரசியல் பதட்டங்கள், உயரும் கடன் தொடர்பான கவலைகள், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகள் பின்னணியில் இருக்கின்றன. இதையெல்லாம் விட தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் தங்க விலையில் ஏற்ற இறக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. எனவே தங்கம் விலை தாறுமாறாக உயர அதிக வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த அட்சய திரிதியைக்கே 3 முறை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அடுத்த அட்சய திரிதியைக்கு என்ன ஆகுமோ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

விமர்சனம் : ‘ஸ்டார் ‘!

அதிர்ச்சி திருதியை ஆன அட்சய திருதியை: ஹாட்ரிக் அடித்த தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share